அறுவடைப்பணி விவசாயிகள் தீவிரம்
பொங்கலுார்; புரட்டாசி பட்டத்தில் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் மாட்டுத் தீவனத்திற்காக சோளம், கம்பு, கொள்ளு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்திருந்தனர்.வழக்கமாக தைப்பொங்கல் சமயத்தில் விவசாயிகள் அறுவடையை முடித்து விடுவர். இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தை மாதம் வரை மழை தொடர்ந்தது. இங்கொன்றும் அங்கொன்றும் ஆக பெயரளவில் மட்டுமே அறுவடை நடந்தது. பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்வதை தள்ளிப் போட்டனர். தற்போது மழை ஓய்ந்து வெயில் தலை காட்டத் துவங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் ஆட்களை வைத்தும், இயந்திரங்களை பயன்படுத்தியும் அறுவடை பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'தற்போதைய வெப்ப நிலை அறுவடைக்குள் சாதகமாக அமைந்துள்ளது இதை காய வைத்து இருப்பு வைத்தால் தான் கோடைகால தீவனத் தேவையை சமாளிக்க இயலும். தை இறுதியில் தேர்த் தாரையை மறைக்கவும், மாசியில் மரம் தளைக்கவும் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. மழைக்கு முன்பாக அறுவடை பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.