கால்நடைகளை தாக்கும் நாய்கள் வேளாண் துறையினருக்கு விவசாயிகள் மனு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில் உள் ளிட்ட இடங்களில் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் தெரு நாய்களின் தாக்குதலுக்கு பலியாவது தொடர்ந்து வருகிறது.'இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை விவசாய அமைப்பினர் முன்வைக்கின்றனர்.பல்வேறு வகைகளில் தங்களின் கோரிக்கைகளை முன்னெடுக்கும் விவசாயிகள், நேற்று முன்தினம் நடந்த கிராம சபையில், கருப்புக்கொடி ஏந்தி பங்கேற்றனர். இந்த விவகாரத்தில், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மனு வழங்கி வந்த விவசாயிகள், நேற்று வேளாண் துறை அதிகாரிகளுக்கு மனு வழங்கினர். ஊத்துக்குளி பகுதி விவசாயிகள், வேளாண் துறை அலுவலருக்கு வழங்கிய மனு:ஆடு, மாடுகளை தெரு நாய்கள் கடித்து, கொன்று வருகிறது. இதுதொடர்பாக ஊத்துக்குளி தாசில்தார் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது விவசாய கிணறுகளில் நீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியவில்லை.எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரம், கால்நடை வளர்ப்பாக உள்ளது.தெரு நாய்கள், கால்நடைகளை கடித்து கொல்வதால், விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்படுகிறது. எனவே, விவசாயம் தொடர்பான இழப்புகளுக்கு வேளாண் துறையினர் பொறுப்பேற்க வேண்டும். தெரு நாய்களால் கடிபட்டு இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.