அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் கருகிய நெற் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம்
உடுமலை; அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில், 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற் பயிர்கள் கருகிய நிலையில், இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தாலுகா அலுவலகத்தில் போராட்டம் நடந்தது.உடுமலை அருகே அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி புதிய ஆயக்கட்டு பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம், மைவாடி, ஜோத்தம்பட்டி, குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், துங்காவி உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த நெற் பயிர்கள், கடந்த, 20 நாட்களில் கருகி, சேதமடைந்துள்ளது.இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம், தாசில்தார் பானுமதி, வேளாண் உதவி இயக்குனர் தேவி, போலீஸ் எஸ்.ஐ.,கோமதி மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில், நெல் சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில், நடப்பு பருவத்தில், திடீரென நெற் பயிர்கள் கருகியுள்ளன.நோய் தாக்குதல், உரம், விதை மற்றும் பூச்சிமருந்து கடைகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததால், தரமற்ற இடு பொருட்கள் காரணமாகவும் நெற் பயிர்கள் பாதித்திருக்கலாம்.நெற்பயிர்கள் கருகியது குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்து. உரிய காரணத்தை அறிவதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.அதே போல், தற்போது பயிர்கள் கருகியுள்ள நிலையில், மீண்டும் நெல் நடவு செய்யும் வகையில். அமராவதி அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்கும் காலத்தை ஒரு மாதம் நீடிக்க வேண்டும், என வலியுறுத்தினர்.இதனையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், வேளாண் துறை, வேளாண் பல்கலை மண்ணியல் துறை, பூச்சியியல் துறை, பயிர் நோயியல் துறை விஞ்ஞானிகளுடன், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள வயல்களில் ஆய்வு செய்து, அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.இப்பிரச்னையில், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.