| ADDED : நவ 28, 2025 03:40 AM
பொங்கலுார்: விவசாயிகளுக்கு பிளாஸ்டிக்கை விட பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருவது காலி மது பாட்டில்கள்தான். கோர்ட் உத்தரவை அடுத்து காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம் தமிழகத்தில் துவங்கி உள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் பலத்த ஆதரவு நிலவுகிறது. பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் பெற்றுக்கொண்டு வாங்கிய கடையிலேயே காலி மது பாட்டிலை திரும்பக் கொடுத்தால் பணம் திரும்ப தரப்படுகிறது. ஆனால், பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்வோர், முறை சாரா பணிகளில் ஈடுபடுவோர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு செல்கிறார்கள். அங்கு மது வகைகளை வாங்குகின்றனர். பத்து ரூபாய்க்காக பாட்டிலை திரும்ப கொண்டு சென்று கொடுப்பது போக்குவரத்து செலவை அதிகரிக்கும். இதனால், அவற்றை குளம், குட்டை, வாய்க்கால், வரப்பு என கண்ட இடங்களில் வீசி விட வாய்ப்பு உள்ளது. எனவே, பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் கீழ், காலி மது பாட்டில்களை எந்த கடையிலும் விற்பனை செய்யும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.