நொய்யலை மீட்டெடுக்க 13ம் தேதி உண்ணாவிரதம்
திருப்பூர்; நொய்யல் ஆற்றை மீட்க வலியுறுத்தி, வரும் 13ம் தேதி, மங்கலத்தில் உண்ணாவிரத போராட்டம் நடக்குமென, விவசாயிகள் அறிவித்துள்ளனர்.திருப்பூர் நகரப்பகுதியில் மட்டுமே, நொய்யலாறு ஆண்டு தோறும் பராமரிக்கப்படுகிறது. மற்றபடி, கோவையில் இருந்து கழிவுநீரை சுமந்துவரும் நொய்யலில், பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுகின்றன.நொய்யல் ஆற்றோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் இதன்காரணமாக, பல்வேறு நோய் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். நொய்யல் ஆற்றில் குப்பை மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுத்து, முழுமையாக ஆற்றை சுத்தப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, மங்கலம் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது.இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் கூறுகையில், ''நொய்யல் அதிகபட்சமாக மாசுபட்டுள்ளது; நொய்யலை பாதுகாக்க வேண்டும். கழிவுகள் மற்றும் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும். கோவை துவங்கி, கரூர் வரை, நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்தக்கோரி, விவசாயிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில், வரும் 13ம் தேதி, மங்கலம் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது,'' என்றார்.