மந்த விற்பனையிலும் மீன்கள் விலை உயர்வு
திருப்பூர் : தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக, கடல் மீன், 40 டன், அணை மீன், 20 டன் விற்பனைக்கு வரும். தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம், கேரளாவில் அசாதாரண சூழல் உள்ளிட்ட காரணங்களால் நேற்று, 30 டன் கடல், 10 டன் அணை மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது.நேற்று அமாவாசை என்பதால், மீன் விற்பனை சுறுசுறுப்பில்லை. வஞ்சிரம், கிலோ 1,250 ரூபாய், ஊழி, 540, சங்கரா, 480, கடல் பாறை, 460, டேம் பாறை, 200, மத்தி, 180 ரூபாய்க்கு விற்றது.மீன் வியாபாரிகள் கூறுகையில்,''மீன் வரத்து இதுவரை இல்லாத வகையில் குறைந்ததால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நடப்பாண்டு, வஞ்சிரம், 1,200 ரூபாய்க்கு விற்பது தற்போது தான். வரும் வாரத்தில் வரத்து உயரா விட்டால் விலை மேலும் உயரலாம்'' என்றனர்.