நஞ்சப்பா பள்ளியில் பாதுகாப்பு குறைபாடு முன்னாள் மாணவர் சங்கம் குற்றச்சாட்டு
திருப்பூர்: நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் விஷமிகள் நடமாட்டம் உள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் நஞ்சப்பா பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மற்றும் கமிஷனரிடம் அளித்த மனு விவரம்:நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, 12 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 1,300 மாணவர்கள் பயில்கின்றனர். மாவட்ட கல்வி அலுவலகம், அறிவுசார் நுாலகம், மாநகராட்சி பொதுக்கழிப்பிடம் ஆகியன இந்த வளாகத்தினுள் அமைந்துள்ளது. இங்கு துாய்மைப் பணியாளர், காவலர் நியமிக்கப்படாமல் உள்ளது. சமீப காலமாக பள்ளியில் விஷமிகள், சமூக விரோத கும்பல் நடமாட்டம் உள்ளது. போதை வஸ்துகள் பயன்படுத்தும் நபர்கள், காதல் ஜோடிகள் நடமாட்டம் உள்ளது. வளாகத்தினுள் வந்து செல்லும் வாகனங்களால் மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் பள்ளி வளாகம் பார்க்கிங் வளாகமாக மாறி விடுகிறது.பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கும் பணியில் மட்டுமே கவனம் செலுத்த முடியும் என்பதால், இது போன்றவற்றை அவர்களால் கண்காணிக்க முடிவதில்லை. எனவே, மாணவர்கள் பாதுகாப்பு கருதி பள்ளியின் சுற்றுச்சுவரை உயர்த்திக்கட்ட வேண்டும்; நிரந்தர காவலர் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.