உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி; நடப்பு கூட்டத்தொடரில் அறிவிக்க எதிர்பார்ப்பு

அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி; நடப்பு கூட்டத்தொடரில் அறிவிக்க எதிர்பார்ப்பு

உடுமலை; அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கி, நடப்பு ஆண்டு அரவை மேற்கொள்ள வேண்டும், என கரும்பு பயிரிடுவோர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில், தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாகவும், திருப்பூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு மாவட்டத்திலுள்ள, 21 ஆயிரம் விவசாயிகளை அங்கத்தினர்களாக கொண்டதாகவும், 60 ஆண்டு பழமையான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.தொடர்ந்து நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருந்த ஆலை, இயந்திர தேய்மானம், பழுது காரணமாக, கரும்பு அரவை செய்ய முடியாமல், கடந்த இரு ஆண்டுகளாக செயல்படவில்லை.இதனால், ஆலைக்கு கரும்பு வழங்கி வந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலையை புனரமைக்க, ரூ.100 கோடி நிதி ஒதுக்க வலியுறுத்தி, தமிழக முதல்வர், வேளாண் துறை அமைச்சர், சர்க்கரை துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டும், அமைச்சர்கள், அதிகாரிகள் பல முறை ஆய்வு செய்தும் நிதி ஒதுக்கவில்லை.இதனால், விவசாயிகள் மத்தியில் ஆலை மீண்டும் இயங்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலையை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நடப்பு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, ஆலையை நவீனப்படுத்த தேவையான நிதி ஒதுக்கி, நடப்பு ஆண்டே ஆலையை நவீனப்படுத்தி மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல், சர்க்கரை ஆலையின் இணை ஆலையாக, 1994ம் ஆண்டு துவக்கப்பட்டு நல்ல நிலையில் இயங்கி வந்த, எரிசாராய ஆலையும் இயந்திரங்கள் பழுது காரணமாக, உற்பத்தி குறைந்துள்ளது.எத்தனாலுக்கு தற்போது நல்ல விலை கிடைத்து வரும் நிலையில், அரசுக்கு வருவாய் கிடைக்கும் இரு ஆலைகளையும் மீண்டும் நவீனப்படுத்தி, சிறப்பாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் சார்பில், முதல்வர், வேளாண் துறை, சர்க்கரைத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி