உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விநாயகர் சிலை, பீடம், மேடை; 10 அடிக்கு மேல் கூடாது

விநாயகர் சிலை, பீடம், மேடை; 10 அடிக்கு மேல் கூடாது

திருப்பூர்; வரும், 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், ஹிந்து முன்னணி உட்பட அமைப்புகள் சார்பில், பொது இடங்கள், கோவில்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் அமித், போலீஸ் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், போலீஸ் துணை கமிஷனர்கள தீபா, பிரவீன் கவுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் நகர பகுதிகளில் சிலைகள் பிரதிஷ்டை செய்வோர், போலீஸ் துணை கமிஷனர்களிடமும், ஊரக பகுதிகளில், அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்களிடமும் அனுமதி பெற்று, சிலைகளை நிறுவ வேண்டும். சிலைகள், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், களிமண்ணால் தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். நீர் நிலைகளை மாசுபடுத்தாத, இயற்கை வண்ணங்கள் மட்டுமே பூசப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வண்ண பூச்சு சிலைகளை பயன்படுத்த கூடாது. சிலைகளின் உயரம், பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து, அதிகபட்சம் பத்து அடிக்கு மேல் இருக்க கூடாது. சிலை பிரதிஷ்டை செய்யப்படும் பகுதியில், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களால் மேற்கூரை அமைக்க கூடாது; பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்க கூடாது. ஒவ்வொரு சிலைக்கும், 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு பொறுப்பாளரை நியமிக்க வேண்டும். போலீசார் அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டுமே விசர்ஜன ஊர்வலம் நடத்த வேண்டும். இவ்வாறு, ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை