உடுமலை;உடுமலை அருகே, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், முக்கிய ரோடுகளில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.அவ்வகையில், உடுமலையில் இருந்து அமராவதி அணை, திருமூர்த்திமலை, மூணாறு உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும், சின்னாறு ரோட்டில், ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீட்டு பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்தது.இதில், போடிபட்டி அருகே, வாளவாடி கிராமத்துக்கு செல்லும் கரும்பு அபிவிருத்தி சாலையும், சின்னாறு ரோடும் இணையும் பகுதியில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான, 60 சென்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது.இதன் சந்தை மதிப்பு ஏறத்தாழ, ஒரு கோடி ரூபாயாகும். இதனையடுத்து, இடத்தை ஆக்கிரமித்திருந்த பாலசுப்பிரமணியம் என்பவருக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில், இரு நாட்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது.மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த, கம்பிவேலி, நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் ராமுவேல், உதவிப்பொறியாளர் லோகேஸ்வரன், சாலை ஆய்வாளர் குருசாமி உள்ளிட்ட குழுவினர் முன்னிலையில், நேற்று அகற்றப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டது.நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்த நெடுஞ்சாலைத்துறை இடம், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது, அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட பகுதியில், ரோடு சந்திப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்கள் சந்திப்பு பகுதியில், நெரிசலில் சிக்குவது தவிர்க்கப்படும்,' என்றனர்.