உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளிகளில் மகிழ்முற்றம் துவக்க விழா; உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்

பள்ளிகளில் மகிழ்முற்றம் துவக்க விழா; உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்

- நிருபர் குழு -உடுமலை சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளில் மகிழ்முற்றம் துவக்க விழா நடந்தது.பள்ளி மாணவர்களின் தலைமைப்பண்பை மேம்படுத்தவும், அவர்களின் திறன்களை அடையாளப்படுத்தவும், மாணவர்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என குழுக்களாக பிரித்து மகிழ்முற்றம் மன்றம் கடந்தாண்டு முதல் துவக்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டுக்கான மகிழ்முற்றம் குழுக்கள் அமைப்பதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பள்ளிகளில் அதற்கான துவக்க விழா நடத்தப்படுகிறது.உடுமலை சுற்றுப்பகுதியில், ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இவ்விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் தாரணி தலைமை வகித்தார். மாணவர்களின் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வண்ணம் வழங்கப்பட்டது.அவர்களுக்கான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் கீழ் ஐந்து மாணவர்கள் உறுப்பினர்களாக இணைந்து செயல்படுகின்றனர்.மாதந்தோறும் அவர்களின் செயல்பாடுகளை குறிப்பதற்கு தகவல் பலகையும் திறக்கப்பட்டது. அனைவரும் மகிழ்முற்றம் உறுதிமொழி எடுத்தனர். ஆசிரியர் கண்ணபிரான் நன்றி தெரிவித்தார்.* ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் மகிழ் முற்றம் மன்றம் துவக்கப்பட்டு, மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.தொடர்ந்து தலைமையாசிரியர் தங்கவேல், மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். இந்த மன்றத்தில் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்தும் தலைமையாசிரியர் விளக்கமளித்தார்.* பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மகிழ் முற்றம் மன்ற பொறுப்பாசிரியர் ராதா மன்ற பொறுப்பு மாணவர்களை தேர்வு செய்தார். தொடர்ந்து சர்வதேச மக்கள் தொகை தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளும் மன்றத்தின் சார்பில் நடந்தது.இதில் பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜெகநாத ஆழ்வார்சாமி தலைமை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். கணித ஆசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சுரேஷ்குமார் மக்கள் தொகை அதிகரிப்பதன் விளைவுகள் குறித்து விளக்கமளித்தார்.மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆசிரியர் சுபத்ரா நன்றி தெரிவித்தார். ஆசிரியர் சண்முகவேல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

வால்பாறை

வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தலின் படி மாணவர்கள் நலனுக்காகவும், தலைமை பண்பை வளர்க்கும் வகையிலும், கடந்த ஆண்டு முதல் 'மகிழ் முற்றம்' எனும் மாணவர் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார். ஆசிரியை கலைவாணி வரவேற்றார்.நிகழ்ச்சியில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து மாணவர் குழுக்கள் அமைக்கப்பட்டன. குழு தலைவர்களாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளியில் மாணவர்களின் தலைமை பண்பை வளர்க்கும் வகையில், குழுக்களை அமைத்து, தலைவர், அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர். இதன் வாயிலாக, மாணவர்கள் மத்தியில் அரசியல் சார்ந்த அனுபவங்கள், ஆளுமைதிறன் மேம்பட, சட்டசபை மற்றும் பார்லிமென்ட் கூட்டமும் நடத்தப்படும்,' என்றனர்.* உருளிக்கல் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியர் வசந்த் தலைமையில் 'மகிழ் முற்றம்' குழு பதவி ஏற்பு விழா நடந்தது. ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளராக கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் முருகேஸ்வரி, கவுன்சிலர் சத்தியவாணிமுத்து மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !