உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அடிப்படை வசதிகளுக்காக மலைவாழ் மக்கள் போராட்டம்! வனத்துறையைக்கண்டித்து இன்று துவக்கம்

அடிப்படை வசதிகளுக்காக மலைவாழ் மக்கள் போராட்டம்! வனத்துறையைக்கண்டித்து இன்று துவக்கம்

உடுமலை ; ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியிலுள்ள மலைவாழ் மக்கள், ரோடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, மீண்டும் மாவட்ட வன அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, திரண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, ஆட்டுமலை, காட்டுப்பட்டி, கருமுட்டி, மேல் குருமலை, ஈசல்திட்டு, பொறுப்பாறு, கோடந்துார், தளிஞ்சி, தளிஞ்சிவயல், கரட்டுப்பதி, திருமூர்த்திமலை ஆகிய, 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களுக்கு, ரோடு, மருத்துவம், கல்வி, வீடு, குடிநீர் என அடிப்படை வசதிகள் இல்லாமல், கடுமையாக பாதித்து வருகின்றனர்.

ரோடு இல்லை

அவசர மருத்துவ தேவைக்காக கூட, பல கி.மீ., துாரம், கரடு, முரடான மலைப்பாதைகளில், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்களை தொட்டில் கட்டி, பல மணி நேரம் துாக்கி வர வேண்டிய நிலை உள்ளது.உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், மண் வீடுகளாக உள்ள நிலையில், மழைக்கு தாங்காமல் கடும் பாதிப்பு ஏற்படுவதோடு, அரசு நலத்திட்டங்களும், மலைவாழ் மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை.பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருவதற்கான ரோடு வசதி, மருத்துவம், ரேஷன் பொருட்களுக்கு ரோடு வசதியே அடிப்படையாக உள்ளது.2006 வன உரிமைச்சட்டப்படி, ரோடு, குடிநீர், வீடு என அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், என விதி உள்ள நிலையில், வனத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் அலட்சியம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறி, 2023 ஜூலை, 12ம் தேதி, மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து ஒரு வாரம் வரை நீடித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.இதனையடுத்து, முதற்கட்டமாக, திருமூர்த்திமலையிலிருந்து, குருமலை வரை மண் ரோடு அமைக்க, ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.மேலும், பொன்னாலம்மன்சோலையிலிருந்து, குழிப்பட்டி, பூச்சிக்கொட்டாம்பாறை, ராவணாபுரம் முதல், மாவடப்பு, காட்டுப்பட்டி வரை ரோடு, கொங்குரார் குட்டை முதல், ஈசல்திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பு வரை மண் ரோடு அமைக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேலும், தளிஞ்சி, தளிஞ்சி வயல் மலைவாழ் மக்கள் வசதிக்காக, கூட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல், வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் மண் ரோடு அமைக்க, வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, அடிப்படை உரிமையான உள்ளாட்சிகளில் ஓட்டுரிமையும் இல்லை.எனவே, மலைவாழ் மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் கோரி, மீண்டும், இன்று முதல், உடுமலையிலுள்ள மாவட்ட வன அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மலைவாழ் மக்கள் சங்கம் அறிவித்துள்ளது.இதனையடுத்து, நேற்று முதல், மலைக்கிராமங்களிலிருந்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன், உணவு சமைப்தற்கான பாத்திரங்கள், பாரம்பரிய இசைக்கருவிகள் என அனைத்து பொருட்களுடன், மலைவாழ் மக்கள் ஊரை காலி செய்து போராட்டத்திற்கு வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை