வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி? வழிகாட்டுகிறது தோட்டக்கலைத்துறை
உடுமலை; வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த, ஒட்டுண்ணிகளை பயன்படுத்த வேண்டுமென, தோட்டக்கலைத்துறை ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. பருவமழைக்கு பிறகு, தென்னை மரங்களில் பரவி வரும் வெள்ளை ஈ தாக்குதலால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், கடந்த, 23ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் தலைமையிலான அலுவலர்கள், மூங்கில்தொழுவு, வீதம்பட்டி மற்றும் அனிக்கடவு உள்ளிட்ட கிராமங்களில், வெள்ளை ஈ தாக்குதல் குறித்து கடந்த இரு நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.அக்குழுவினர் கூறியதாவது:குடிமங்கலம் வட்டாரத்தில், சுமார், 14 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆங்காங்கே தென்னை மரங்களில், வெள்ளை ஈ தாக்குதல் தென்படுகிறது. அறிகுறிகள்
l ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்பரப்பில் வட்ட அல்லது சுருள் வடிவில் முட்டை இடும்.l குஞ்சுகள் இலைகளின் சாற்றை உறிஞ்சி முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி, காற்றின் திசையில் பரவி, அடுத்தடுத்த மரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஈக்கள் கூட்டம், கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் காணப்படும்.l கீழ் அடுக்கில் உள்ள இலைகளின் மீது பசை போன்ற கழிவு திரவம் படர்ந்து, அதன்மேல், கரும்பூசணம் வளர ஏதுவாகிறது. தாக்குதலால் ஓலையில், பச்சையம் செயலிழந்து மகசூல் குறையும் வாய்ப்புள்ளது.l தென்னையில் ஊடுபயிராக உள்ள பாக்கு, கொய்யா, மரவள்ளி, வாழை, இலுப்பை, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் வெள்ளை ஈக்களின் தாக்குதலை காணலாம். தடுப்பு முறை
l வெள்ளை ஈக்களின் நடமாட்டம் மற்றும் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, தென்னந்தோப்புகளில் விளக்குபொறி ஏக்கருக்கு, 2 வீதம், இரவில், 7:00 மணி முதல் 11:00 மணி வரை வைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.l வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை மஞ்சள் நிறம் கவரும் தன்மையுடையது. மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகள் விளக்கெண்ணெய் அல்லது கிரீஸ் தடவப்பட்ட மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களை, ஏக்கருக்கு 10 வீதம், 6 அடி உயரத்தில் தொங்க விட்டு, ஈக்களை கவர்ந்தும், நடமாட்டத்தை கண்காணித்தும் கட்டுப்படுத்தலாம்.l வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட, நன்மை செய்யும் கூட்டுப்புழு உள்ள தென்னை ஓலை துண்டுகளை ஏக்கருக்கு, 20 வீதம் ஈக்கள் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது, 10 மரம் இடைவெளியில் வைத்து ஒட்டுண்ணிகளை விட வேண்டும்.l கரும்பூசாணத்தை கட்டுப்படுத்த ஒரு கிலோ மைதா மாவினை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, கொதிக்க வைத்து மைதா மாவு பசை தயார் செய்ய வேண்டும். அதன்பிறகு, 10 லிட்டர் தண்ணீரில், 250 கிராம் மைதா மாவு பசையோடு, 10 மில்லி ஒட்டும் திரவம் அல்லது சோப்பு கரைசல் கலந்து கரும் பூசாணம் உள்ள ஓலைகளின் மீது தெளிக்க வேண்டும்.l பூச்சி மேலாண்மை குறித்த தகவல் ஆலோசனைகளுக்கு, பெதப்பம்பட்டி உள்வட்ட விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ராஜசேகர் 86755 56865; சங்கவி 81110 55320; குடிமங்கலம் உள்வட்ட விவசாயிகள் சரவணகுமார் 97891 97648; மதன் 97867 78651 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.கூடுதல் தகவலுக்கு, துணை தோட்டக் கலை அலுவலர் சிவானந்தன் 99449 37010 என்ற மொபைல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.