உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனைவியை கொலை செய்த கணவர் சிறையிலடைப்பு

மனைவியை கொலை செய்த கணவர் சிறையிலடைப்பு

திருப்பூர் ; மனைவியை கொலை செய்து, கல்லால் முகத்தை சிதைத்து விட்டு தப்பியோடிய கணவனை பிடித்த திருப்பூர் போலீசார் விசாரணைக்குப் பின் அவரை சிறையில் அடைத்தனர்.மதுரை, வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன், 30. பத்தாண்டு முன், திருப்பூரில் பணியாற்றிய போது, சித்ரா, 28 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டனர். தம்பதியர் மதுரையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 9 வயதில் மகள், 2 வயதில் மகன் உள்ளனர். தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு கடந்த, 3 மாதம் முன்னர் சித்ரா, தன் குழந்தைகளுடன் திருப்பூர் வந்து தன் தாய் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த ஒரு மாதமாக பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸ் பணிக்குச் சென்று வந்தார்.கடந்த வாரம் திருப்பூருக்கு வந்த ராஜேஷ் கண்ணன், சித்ரா மற்றும் குழந்தைகளை தன்னுடன் மதுரைக்கு அழைத்துள்ளார். சில நாள் இங்கு இருந்து விட்டு செல்லலாம் என சித்ரா கூறியுள்ளார். இதையடுத்து அவரும் இங்கு தங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி, இரவு பணி முடிந்து வந்த சித்ராவை, ராஜேஷ்கண்ணன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். குழந்தைகளுக்கு தின்பண்டங்களும் வாங்கிக் கொண்டு இருவரும் பேசியபடி வந்துள்ளனர்.அப்போது இருவரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில், கலெக்டர் ஆபீஸ் முன்புறம், பூம்புகார் நகர் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக ராஜேஷ் கண்ணன், சித்ராவின் முகத்தில் தாக்கியுள்ளார். இதில் நிலை குலைந்த சித்ரா மயங்கி விழுந்தார். அவரை கைத்தாங்கலாக மறைவான இடத்துக்கு கொண்டு சென்றவர், அங்கு அவரின் தலையிலும், முகத்திலும் கல்லைப் போட்டு தாக்கியுள்ளார். பின்னர், வீட்டுக்குச் சென்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு மதுரை சென்று விட்டார்.தகவலறிந்து, சித்ராவின் உடலை மீட்ட திருப்பூர் போலீசார், மதுரை சென்று அவரைக் கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். நேற்று அவரிடம் சம்பவம் குறித்து போலீசார் வாக்குமூலம் பெற்று பதிவு செய்தனர். அதன் பின் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ