திருப்பூர்: ''செய்தித்தாள்களை விடாமல் படித்ததால், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொண்டேன்; குரூப் 1 தேர்வில் வெற்றி பெறவும், வேலைவாய்ப்பு பெறவும் என்னால் முடிந்தது,'' என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் பேசினார். பொது நுாலக இயக்ககம், மாவட்ட மைய நுாலக வாசகர் வட்டம் சார்பில், 58வது தேசிய நுாலக வார விழா, பார்க் ரோடு, மாவட்ட மைய நுாலக வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட மைய நுாலக அலுவலர் பாக்கியலட்சுமி வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) ராஜன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் புருேஷாத்தமன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புத்தக கண்காட்சி அரங்கை திறந்து வைத்த, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் குமார் பேசியதாவது: அரசு பள்ளி, அரசுக் கல்லுாரியில் படிக்கும் போது புத்தகவாசிப்பில் எனக்கு ஆர்வம் அதிகம். புத்தகங்களை தேடி பயணிக்கும் போது நம் சிந்தனை வளரும்; மாற்றங்கள் நிகழும். ஒரு சிறந்த புத்தகம் போரை நிறுத்தி, அஹிம்சை வழியில் கூட வெற்றி பெறலாம் என மனதையே மாற்றக் கூடிய வல்லமை படைத்தது. சிறந்த புத்தகங்கள் மனங்களில் விதையாக பதிந்து, மரமாக வளர்ந்து நிற்கும். ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால், செய்தித்தாளை நான் பார்க்க வேண்டும் என்றால், கிராமத்தில் இருந்து நான்கு கி.மீ., செல்ல வேண்டும். ஆனாலும், செய்தித்தாள் படித்தால் தான் அன்றைய நாள் முழுமை பெறும் என்பதால், காலை எழுந்து முதல் வேலையாக அனைத்து செய்தித்தாள்களை வாங்கி, முழுமையாக படித்து விடுவேன். செய்தித்தாள்களை விடாமல் படித்ததால், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொண்டேன். குரூப் 1 தேர்வில் வெற்றி பெறவும், வேலைவாய்ப்பு பெறவும் என்னால் முடிந்தது. பணிக்கும் வந்தேன். நான் எதிர்கொண்ட அனைத்து போட்டித்தேர்வுக்கும் புத்தகங்கள், செய்தித்தாள் பெரும் கைகொடுத்தது என்றால் மிகையாது. இன்று குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பை சொல்லித்தர வேண்டியுள்ளது. மொபைல் போன்களில் அதிகமாக நேரத்தை செலவிடுகின்றனர். பெற்றோர் குழந்தைகள் கையில் மொபைல் கொடுக்காதீர். புத்தகம், செய்தித்தாள் வாசிப்பு பழக்கத்தை தயவு செய்து அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுங்கள். பாடப்புத்தகங்களை தாண்டி, நல்ல கருத்துகளை, அறிவை வளர்க்கும் நிறைய புத்தகங்கள் பொக்கிஷமாக உள்ளது. இவ்வாறு, சுரேஷ்குமார் பேசினார். 'இளைஞர்களுக்கு இன்றைய நுாலகத்தின் பயன்கள்' எனும் தலைப்பில், பட்டிமன்ற பேச்சாளர்கள் புவனேஸ்வரி, நாகராஜ் பேசினர். மாவட்ட நுாலக கண்காணிப்பாளர் சாந்தி, முத்தமிழ் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நுாலகர் முருகன் நன்றி கூறினார். செய்தித்தாள்களை விடாமல் படித்ததால், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொண்டேன். குரூப் 1 தேர்வில் வெற்றி பெறவும், வேலைவாய்ப்பு பெறவும் என்னால் முடிந்தது. பணிக்கும் வந்தேன். நான் எதிர்கொண்ட அனைத்து போட்டித்தேர்வுக்கும் புத்தகங்கள், செய்தித்தாள் பெரும் கைகொடுத்தது என்றால் மிகையாது