உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கற்பித்தலில் புதுமைக்கு முக்கியத்துவம்

 கற்பித்தலில் புதுமைக்கு முக்கியத்துவம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதிக்க தவறியபோதும், இந்தாண்டு, மாவட்ட கல்வித்துறை புதுமை, அர்ப்பணிப்புடன் சாதித்துக்காட்ட முனைப்பு காட்டிவருகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வில், தொடர்ந்து முதலிடத்தை கைப்பற்றி வந்த, திருப்பூர் மாவட்டத்துக்கு, 2025 சறுக்கலாக அமைந்தது. முந்தைய ஆண்டை விட, 0.08 சதவீத கூடுதல் தேர்ச்சி (97.53) பெற்றும், மூன்றாமிடமே பெற முடிந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், முந்தைய ஆண்டு 21வது இடம் பெற்ற திருப்பூர், நான்கு இடங்கள் முன்னேறி, 17வது இடம் பெற்றது. கல்வியாண்டு துவக்கத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், மூன்றாம், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அளவை மேம்படுத்த, திருப்பூரில் ஆலோசனை கூட்டம் நடத்தி, கருத்துகளை குறிப்பெடுத்துக் கொண்டார். கோவை மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலராக, இருந்த புனித அந்தோணியம்மாள், திருப்பூருக்கு முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். காளிமுத்து மாவட்ட கல்வி அலுவலராகவும், சித்ரா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலராகவும் பணிபுரிகின்றனர். மாவட்ட கலைத்திருவிழா, மாநில கலைத்திருவிழா இந்த மாதமே முடிந்து, விருதுகள் வழங்கப்பட்டன. ஜவ்வாக இழுத்து வந்த இலவச சைக்கிள் வழங்கும் பணி 'தேர்தல் வர போகிறது' என்ற பள்ளிக் கல்வித் துறையின் தொடர் உத்தரவால், விரைவுபடுத்தப்பட்டது. ஒரே நாளில், பத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில், 5,000 பேர் வரை சைக்கிள் வழங்கப்பட்டது. கற்பித்தலில் புதுமை கற்றல் அனுபவத்தில் புதுமையை கொண்டு வரும் ஆசிரியர்களை தேட பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. 'டிஜிட்டல் கருவிகள் மற்றும் ஆன்லைன் கற்றல் தளங்களை பயன்படுத்தி, கற்பிக்கும் ஆசிரியர்களே இன்றைய கல்விச்சூழலுக்கு முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களை தேடி கண்டறிந்து, பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்,' என முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மீண்டும் சாதிக்குமா? 2026ல் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தை பெறும் முயற்சி துவங்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு தேர்ச்சி அடிப்படையில், மிகவும் பின்தங்கியுள்ள, 40 பள்ளிகளுக்கு, கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், ஆர்.டி.ஓ. உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு சென்று, தேர்ச்சியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர். தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முன்மாதிரியாக முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டம் கைகொடுக்குமா, 2026 பொதுத்தேர்வு முடிவு, மே மாதம் வெளியிடும் போது, திருப்பூர் கல்வி மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பெறுமா என்பது தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி