மேலும் செய்திகள்
பிரச்னையும் தீர்வும்
16-Aug-2025
உடுமலை; உடுமலை சந்தை வளாகத்தில், கடைகள் கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதோடு, ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் நிறுத்த முடியாமல், ரோட்டில் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உடுமலை நகராட்சி, சந்தை வளாகம், 16.14 ஏக்கரில் அமைந்துள்ளது. நுண் உரக்குடில், ஆடு வதைக்கூடம் என சந்தை வளாகம் குறுகலாக மாறியுள்ளது. தற்போது சந்தையில், 34 கமிஷன் கடைகள் மற்றும் 314 நிரந்தர கடைகள் உள்ளன. உடுமலை சுற்றுப்பகுதிகளில் விளையும், தக்காளி, தேங்காய், வெங்காயம், முருங்கை, கத்தரி, வெண்டை என தினமும், 700 டன் வரை காய்கறிகள் வரத்து வருகிறது. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம், மறையூர், மூணாறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து, காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர். தினசரி சந்தையில், காய்கறி வாங்க, பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர். தரைக்கடைகளில் அமர்ந்து, வியாபாரிகள் விற்பனை செய்வதை தவிர்க்கும் வகையில், பழைய கடைகளை புதுப்பிக்கவும், புதிய கடைகள் அமைக்கவும் வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், 6.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போதுள்ள ராஜேந்திரா ரோடு வணிக வளாகத்திற்கு இணையாக, சந்தை வளாகத்திற்குள் கடைகள் கட்டுமான பணி நடந்தது. ஒரு பகுதியில் மட்டும் கடைகள் கட்டப்பட்ட நிலையில், மீதம் உள்ள பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதே போல், கமிஷன் கடைகள் ஆக்கிரமிப்பு, தரைக்கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக, கடும் பாதிப்பு ஏற்படுகிது. விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை, இறக்கி வைத்து விற்பனை செய்ய முடியாமலும், வாகனங்கள் உள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, தக்காளி வரத்து 'சீசன்' துவங்கியுள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கறிகள் ஏற்றிச்செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ராஜேந்திரா ரோடு, பழநி ரோடுகளில் வாகனங்களை நிறுத்தி காய்கறிகளை ஏற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு, விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். எனவே, சந்தையில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியை ஏற்படுத்தவும், கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
16-Aug-2025