செய்முறை நோட்டுகள் வழங்க வலியுறுத்தல்
உடுமலை; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் கல்வி இடைநிற்றல் இல்லாமல் தொடர்வதற்கு, மாணவர்களுக்கு புத்தகபை, வண்ணபென்சில்கள், பாடப்புத்தகங்கள் முதல் லேப்டாப் வரை, அவர்கள் படிப்பதற்கு தேவையான, 14 வகையான நலத்திட்டப் பொருட்கள் கல்வியாண்டு தோறும் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் கல்வித்துறையின் சார்பில் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. ஆனால், செய்முறை பாடங்களுக்கு மட்டும், மாதிரி புத்தகம் மற்றும் அதற்கான நோட்டுகள், அரசின் சார்பில் வழங்கப்படுவதில்லை.சில பள்ளிகளில் மாணவர்களாகவே வாங்கிக்கொள்கின்றனர். மேல்நிலை வகுப்புகளில், இன்னும் கட்டணம் செலுத்தி நோட்டுகளை வாங்க முடியாத நிலையில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும், அரசு பள்ளியில் படிக்கின்றனர். அத்தகைய மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் உதவுகின்றனர். நலத்திட்ட பொருட்களில் ஒன்றாக, செய்முறை நோட்டுகளையும் வழங்க பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.