குறைந்த நேர இடைவெளியில் பஸ் இயக்க வலியுறுத்தல்
உடுமலை : உடுமலையிலிருந்து பழநி செல்வதற்கு, மாற்று வழித்தடமாக உடுமலை - கொழுமம் ரோடு உள்ளது. உடுமலையிலிருந்து மலையாண்டிகவுண்டனுார், உரல்பட்டி, சாமராயபட்டி, குமரலிங்கம், கொழுமம் வழியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த கிராமங்களிலிருந்து, நாள்தோறும் வேளாண்மை பொருட்கள் விற்பனை, கல்லுாரி, பணி தொடர்பாக உடுமலை வந்துசெல்கின்றனர். கொழுமம் சுற்றுப்பகுதியில் பல்வேறு பழமையான கோவில்கள் இருப்பதால், உடுமலை சுற்றுப்பகுதியிலிருந்தும் அதிகமான பக்தர்கள் சென்று வருகின்றனர். நாள்தோறும், இந்த வழிதடத்தில் அரைமணிநேர இடைவெளியில், காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் மதியத்தில் 2:00 மணி முதல் 5:00 மணி வரை பஸ்கள் எதுவும் இயக்கப்படுவதில்லை.இதனால் அப்பகுதியிலிருந்து மதிய நேர பஸ்களை தவற விடுவோர் மாலை வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதேபோல், மாலை பள்ளி நேரத்தில் பஸ்கள் இல்லாததால், உடுமலையிலிருந்து இந்த கிராமப்பகுதிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மதிய நேரம் பஸ் இயக்கப்படும் நேர இடைவெளியை குறைக்க வேண்டுமெனவும், கூடுதல் பஸ்கள் பள்ளி நேரத்தில் இயக்க போக்குவரத்து கழகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.