தண்டவாளத்தை கடப்பவர்களை தடுக்க இரும்பு தடுப்பு நிறுவும் பணி
திருப்பூர்: அத்துமீறி தண்டவாளத்தை கடப்பவர்களை தடுக்க, இரும்பு கம்பிகளை கொண்டு தடுப்பு அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தை கடப்பதும், ரயில்வே ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் பிரவேசிப்பதும், ரயில்வே சட்டப்படி குற்றம். ஆனாலும், தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் வசிப்பவர்கள், தண்டவாளத்தை கழிப்பிடம், குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துவது, சற்றும் பயமில்லாமல் சிறுவர், சிறுமியர் தண்டவாளத்தை கடந்து செல்வது, இரவு நேரங்களில் தண்டவாளத்தை அமர்ந்து பொழுது போக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். ரயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர் அவ்வப்போது ரோந்து பணி மேற்கொண்டாலும், அத்துமீறல்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்க முடியவில்லை. குறிப்பாக, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் துவங்கி,சூசையாபுரம், கல்லம்பாளையம், காலேஜ் ரோடு, அணைப்பாளையம் வரை ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் 20 அடி துாரத்துக்குள் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. வீட்டின் முன் கதவு மட்டுமின்றி, தண்டவாளம் இருக்குமிடத்தில் (பின்புறம்) மற்றொரு கதவு வைத்து ரயில்வே எல்லைக்கு உட்பட்ட பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். பலமுறை எச்சரிக்கை விடுத்தும், தண்டவாளத்தை கடந்து ஒருபுறம் இருந்து மறுபுறம் வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க தண்டவாளத்தின் இருபுறமும் இரும்பு தடுப்பும் அமைக்கும் பணியை ரயில்வே துவங்கியுள்ளது. பழைய தண்டவாளங்களை கொண்டு, கல்லம்பாளையம் பகுதியில் இரும்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், அத்துமீறுவோருக்கு அபராதம் விதிப்பதுடன், அபராதம் விதித்தால் மட்டுமே குற்றச்செயல்கள் குறையும்.