திருப்பூர்:  திருப்பூர் மாவட்டத்தில், மக்காளச்சோள பயிருக்கு காப்பீடு செய்வதில் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. கடந்தாண்டு மட்டும், காப்பீடு தொகை வேண்டி விண்ணப்பித்த, 1,271 விவசாயிகளுக்கு, 3.62 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்துறை சார்பில் நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், நெல், கொண்டைக்கடலை பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.'பொதுவாக, மக்காச்சோள பயிருக்கு காப்பீடு செய்து கொள்வதில் விவசாயிகள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், கடந்த நிதியாண்டு, மக்காச்சோளப் பயிருக்கு காப்பீடு செய்து கொள்வதில், இதுவரையில்லாத ஆர்வம், விவசாயிகள் மத்தியில் காணப்பட்டது. மக்காச்சோளத்துக்கான கிராக்கி அதிகரிப்பும், கால நிலை ஒத்து வந்ததும் இதற்குக் காரணம்' என, வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு, 545 ரூபாய் பிரிமியம் தொகையாக விவசாயிகள் செலுத்த வேண்டும்; பயிர் காப்பீடு சேத அளவீடு அடிப்படையில், அதிகபட்சம், 36 ஆயிரம் ரூபாய் வரை ஏக்கருக்கு வழங்கப்படுகிறது.வேளாண் துறையினர் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில், 18 ஆயிரம் எக்டர் பரப்பளவில், மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். கடந்த நிதியாண்டில் (2024 - 2025), 1,632 மக்காச்சோள விவசாயிகள், பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து, பிரிமியம் தொகையாக மொத்தம், 16 லட்சத்து 45 ஆயிரத்து 922 ரூபாய் செலுத்தினர். இதில், காப்பீடு தொகை வேண்டி விண்ணப்பித்த, 1,271 விவசாயிகளுக்கு, 3 கோடியே 62 லட்சத்து 59 ஆயிரத்து 281 ரூபாய் தொகை, காப்பீடு நிறுவனம் வாயிலாக விடுவிக்கப்பட்டுள்ளது; விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்' என்றனர்.