ஐகோர்ட் உத்தரவை அவமதிப்பதா? துாய்மைப்பணியாளர்கள் ஆவேசம்
திருப்பூர்: 'உள்ளாட்சிகளில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களுக்கு, ஐகோர்ட் உத்தரவுப்படி குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டம், மறியலில், 900 பேர் கைதாகினர். திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடந்தது. இதில், 'மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் துாய்மைப்பணி தனியார் மயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சியில் பணிபுரியும் 'அவுட்சோர்ஸிங்' துாய்மைப் பணியா ளர், ஓட்டுனர், குடிநீர் பணியாளர் மற்றும் டி.பி.சி. ஊழியர்களுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். பி.எப். இ.எஸ்.ஐ. பிடித்தங்களில் முறைகேடுகளை தடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பள ரசீது வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அரசு ஏற்கும் மாவட்ட செயலர் ரங்கராஜ், தலைமை வகித்தார். மா.கம்யூ. மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், ''துாய்மைப் பணியாளர்களுக்கான சம்பள உயர்வு கோரிக்கையை அரசு நிச்சயம் ஏற்கும்; சென்னையில், சமீபத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் சம்பளம் உயர்த்தி வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது,'' என்றார். மா.கம்யூ. மாவட்ட செயலர் மூர்த்தி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலர் சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட, 450 பெண்கள் உட்பட, 900 பேர் கைது செய்யப்பட்டு ரோட்டரி அரங்கில் தங்க வைக்கப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.