உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகராட்சி நிர்வாகத்துக்கு அசிங்கமா இல்லையா! கவுன்சிலர்கள் ஆவேசம்; ஒருவர் வெளிநடப்பு

நகராட்சி நிர்வாகத்துக்கு அசிங்கமா இல்லையா! கவுன்சிலர்கள் ஆவேசம்; ஒருவர் வெளிநடப்பு

உடுமலை : உடுமலை நகராட்சி கூட்டத்தில், 'நிர்வாகம் மோசமாக உள்ளது; பணிகள் நடக்காததால், மக்களிடம் செல்ல முடியவில்லை', என கவுன்சிலர்கள் ஆவேசமாக பேசினர்.உடுமலை நகராட்சி கூட்டம், தலைவர் மத்தீன் தலைமையில் நடந்தது. கமிஷனர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். இதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:ராஜலட்சுமி ( தி.மு.க.,): தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு இணைப்பு ரோடு, மழை நீர் வடிகால் சேதமடைந்தது, சரஸ்வதி லே - அவுட், மின் விளக்கு, ரோடு அமைக்காதது, வார்டில் தெரு விளக்கு அமைக்க கோரியது, 5 பூங்காவும் புதர் மண்டி காணப்படுகிறது.மக்களின் அடிப்படை பிரச்னைகளான, சுகாதாரம், குப்பை, தெரு விளக்கு என மூன்று ஆண்டாக கோரிக்கை விடுத்தும், பேசியும் ஒரு பயனும் இல்லை. இங்க என்ன கவுன்சிலர்கள் 'கதை' சொல்லவா வருகின்றனர்.நகர பொறியாளரிடம் சென்றால், மக்கள் பிரதிநிதி என்ற கூட பாராமல், மரியாதை குறைவாக பேசுகிறார். அதிகாரிகளிடம் எந்த வேலை சொன்னாலும் செய்வதில்லை. மக்களுக்கு எந்த வேலையும் செய்யாமல், கவுன்சிலர்கள் எப்படி வார்டுக்குள் செல்ல முடியும். இதனை கண்டித்து, வெளிநடப்பு செய்கிறேன்.ஒரு வாரத்திற்குள் வார்டுக்குள் வேலை நடக்காவிட்டால், மக்களை திரட்டி வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன், என கூறி வெளிநடப்பு செய்தார்.சாஜாதி பர்வீன் (தி.மு.க.,): வார்டில், பாதாளச்சாக்கடை திட்ட குழாய்களில் முறையாக கழிவு நீர் செல்லாமல், கழிவு நீர் திரும்ப வீடுகளுக்குள் சென்று, பாதிப்பு ஏற்படுகிறது. குடிநீர் வினியோக குளறுபடி, ரோடுகள் சிதிலமடைந்தும் உள்ளது. மூன்று ஆண்டுகளாக பேசியும் பிரயோஜனம் இல்லை; எங்கள் வார்டு மக்கள் என்ன பாவம் செய்தனர்.துணைத்தலைவர் கலைராஜன்: வீடு தேடிச்சென்று வரி செலுத்த வற்புறுத்தப்படுகிறது. ஆனால், வரிவசூல் மையத்தில் பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழிக்கின்றனர். இதுவரை கட்டி வந்தவர் பெயர் இல்லை என திருப்பி அனுப்புகின்றனர். வணிக பகுதியாக இருந்த பெரியகடை வீதி, திடீரென குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது. ஆறு ஆண்டுகள் வரி செலுத்தியவர்கள் பாதிக்கின்றனர். நிலுவை வைத்திருந்தவர்களுக்கு குறைந்த தொகை வசூலிக்கப்படுகிறது. நகராட்சி வணிக வளாக கடைகளுக்கு கூடுதல் வாடகை நிர்ணயிக்கப்பட்டதால், பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். தற்போது, கடை வைத்துள்ளவர்வர்களுக்கு, வாடகை குறைத்து வழங்க வேண்டும்.வேலுசாமி (தி.மு.க.,): நகராட்சி முதல் கூட்டத்தில், அண்ணா கலையரங்கம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது வரை திட்ட வடிவமைப்பு, மதிப்பீடு கூட தயாரிக்கவில்லை. சிறப்பு நிதியாக வந்த, 50 கோடி ரூபாய்க்கு எந்த பணியும் மேற்கொள்ளாமல், நிதி எங்கே சென்றது என தெரியவில்லை. அதே போல், பல வளர்ச்சி பணிகள் பாதியில் நிற்கிறது.கவுன்சிலர்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எந்த வேலையும் செய்யாமல், முறைகேடுகள் அதிகளவு நடக்கிறது. 25 லட்சம் ரூபாய் திட்டமதிப்பீடு தயாரித்து, 10 லட்சம் ரூபாய்க்கு கூட பூங்காவில் வேலை நடக்கவில்லை. பில் பாஸ் செய்து தரப்பட்டுள்ளது. இவ்வாறு, மக்களின் வரிப்பணம் பெருமளவு முறைகேடு செய்யப்படுகிறது.கொஞ்சம் தொகையை முறைகேடு செய்யலாம்; ஒட்டுமொத்த தொகையையும் முறைகேடு செய்யப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் மிகவும் மோசமாக உள்ளது. ஏறத்தாழ, 80 லட்சம் ரூபாய் செலவில், வெளி நபர்கள் ஒப்பந்தம் வாயிலாக பணிக்கு நியமிக்கப்படுகின்றனர். இதனை யாரும் கண்காணிப்பதில்லை. பணிக்கு ஆட்கள் நியமிப்பதும் இல்லை; வருவதும் இல்லை.திருமூர்த்தி நகர் நீருந்து நிலையத்தில், பணியாளர்களே இல்லை. குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதே இல்லை. நகரில் சுகாதார கேடு ஏற்பட்டு, பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு கவுன்சிலர்களே பதில் சொல்ல வேண்டியுள்ளது.''இது அதிகாரிகளுக்கு அசிங்கமா இல்லையா''. நகராட்சியில் திட்ட பணிகளும், சுகாதாரம், தெரு விளக்கு என அன்றாட பணிகளும் முறையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.இதே போல், நகராட்சி கூட்டத்தில் பேசிய பெரும்பாலான கவுன்சிலர்கள், மக்களுக்கான அடிப்படை வசதிகள் கூட நடப்பதில்லை. திட்ட பணிகளுக்கு டெண்டர் விட்டாலும், ஆண்டு கணக்கில் பணி நடப்பதில்லை. பணி மேற்கொண்டவர்களுக்கு, நிதி வழங்குவதில்லை, நகராட்சி நிர்வாகத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளது, என புலம்பினர்.இக்கூட்டத்தில், பொறியியல் பிரிவு சார்பில், 78, வருவாய் பிரிவு, 6, சுகாதார பிரிவு, 14 , நகரமைப்பு பிரிவு, 3 உட்பட, 107 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை