உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேரளக் கழிவுகளுக்கு இங்குதானா குப்பைத்தொட்டி?

கேரளக் கழிவுகளுக்கு இங்குதானா குப்பைத்தொட்டி?

திருப்பூர்: திருப்பூர் அருகே சாலையோரம் வீசப்பட்ட கேரளக்கழிவுகள், பொதுமக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை காரணமாக அகற்றப்பட்டன. கழிவுகளை வீசியோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல் இனிமேல் நடைபெறாதவகையில் கண்காணிப்பும், கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்ட வேண்டும். தாராபுரம் - ஈரோடு ரோட்டில், சிறுகிணறு ஊராட்சி, நொச்சிபாளையம் பகுதியில், மூட்டை மூட்டையாக கழிவுகள் கொட்டப்பட்டுக் கிடந்தன. இரவு நேரத்தில் சரக்கு வாகனத்தில் இந்த கழிவுகள் கொண்டு வந்து வீசிச் சென்றது தெரிந்தது. அப்பகுதியினர் தகவல் அளித்து, ஒன்றிய அலுவலர்கள், சுகாதார துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். கழிவுகள் கட்டி வீசப்பட்டிருந்த சாக்கு பையில் இருந்த மஹாராஷ்டிரா நிறுவன முகவரியைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் உள்ள மசாலா உள்ளிட்ட உணவு பொருள் உற்பத்தி நிறுவனத்துக்கு மூலப் பொருட்கள் அனுப்பியது தெரிந்தது. அந்நிறுவனத்தை தொடர்பு கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து கேட்ட போது, துாய்மைப் பணி ஒப்பந்ததாரர் மூலம் அதை அனுப்பிய விவரம் தெரிந்தது. அவரைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, ஒரு லாரியில் வாடகை பேசி கழிவு மூட்டைகளை அனுப்பியது தெரிந்தது. அவரை வரவழைத்து, கழிவுகளை வீசிச்சென்ற லாரியும் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. அதே லாரியில் பொக்லைன் மூலம் மூட்டைகள் ஏற்றப்பட்டது. பொது இடத்தில் கழிவுகளை கொட்டியதாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அதன் பின், விதிகளை மீறி செயல்பட்டதாக ஊதியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த லாரி மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் கழிவு மூட்டைகள் திரும்பவும், அது ஏற்றப்பட்ட நிறுவனத்துக்கே திரும்ப கொண்டு சென்று ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. சமீபத்தில் பல்லடம் அருகே கிணற்றில் மூட்டை மூட்டையாக கழிவுகள் கொட்டப்பட்டன. இதேபோல், தொடர்ந்து சாலையோரம் கழிவுகள் வீசப்படுகின்றன. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மாநில எல்லையோர மாவட்டங்களில் கொண்டு வந்து கொட்டுவது வாடிக்கையாக உள்ளது. கேரள கழிவுகளின் குப்பைத்தொட்டியாக தமிழகத்தை எண்ணியுள்ளனர். குறிப்பாக, திருப்பூரின் பல்வேறு இடங்களில் இவ்வாறு கொட்டப்படுவது தொடர்ந்து நடக்கிறது. மாநில, மாவட்ட எல்லைகளைக் கடந்து எந்த சோதனையிலும் சிக்காமல் இது போல் கழிவுகள் வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அனைத்து துறைகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இது போல் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

மாசுக்கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்

கழிவுகள் என்று வந்து விட்டால் உள்ளாட்சி அமைப்புகள் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். இங்கு கொட்டப்பட்டது உணவு பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் பயன்படுத்திய மாஸ்க், பாக்கெட் செய்யப்பயன்படுத்தும் காகிதங்கள் மீதம், ஒரு சில சாம்பிள் பாக்கெட் மசாலா பொருட்கள் ஆகியன இருந்தன. பொதுமக்கள் சந்தேகப்பட்டது போல் மருத்துவ கழிவுகள் இல்லை. இருப்பினும் கழிவுகளை முறையாக கையாளாமல் அதை பொது இடத்தில் கொண்டு வீசியது மிகப் பெரிய குற்றம். உரிய சட்ட விதிகளின்படி முதல் முறைக்கான அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டதோடு, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நிறுவனமாக இருந்தாலும் அதன் கழிவுகளை அதன் தன்மைக்கேற்ப கையாள வேண்டும். மறு சுழற்சி, மறு பயன்பாடு, முறைப்படி அழித்தல் உள்ளிட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்ற வேண்டும். - ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர், குண்டடம்.

மருத்துவக்கழிவு கையாள வழிமுறை

கழிவுகளைப் பொறுத்தவரை, மருத்துவ கழிவுகள் எனில், மருத்துவப்பணிகள் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ கழிவுகளை வீசிச் சென்றால் அவற்றை பறிமுதல் செய்து, அதை கொண்டு வந்த மருத்துவமனையைக் கண்டறிந்து உரிய விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மருத்துவ கழிவுகளை கையாளும் வழிமுறைகள் வகுத்து வழங்கப்பட்டுள்ளன. அவை முறையாகப் பின்பற்றப்படுவது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. - மீரா, இணை இயக்குனர், மாவட்ட மருத்துவப்பணிகள் துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram pollachi
அக் 25, 2025 11:12

இது ஒரு தொடர் கதை.... எந்த செக்போஸ்ட் மூலமாக தமிழகம் வந்ததோ அந்த வழித்தடத்தை நிரந்தரமாக மூடிவிடுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை