திருப்பூர்: குறைகேட்பு கூட்டத்தில் தாங்கள் அளிக்கும் மனுக்களை, துறை சார்ந்த அதிகாரிகள் பரிசீலனை செய்து, உரிய தீர்வு ஏற்படுத்தவேண்டும்; குறைகளை கேட்பதோடு நின்றுவிடாமல், குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது, மக்களின் கோரிக்கையாக உள்ளது. திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம் ஆகியோர், மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டனர். மனுக்கள், தீர்வு காண்பதற்காக, துறை சார்ந்த அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வெள்ளகோவிலை சேர்ந்த மணிகண்டன் மற்றும் மக்கள்: வெள்ளகோவில் ஒன்றியம், உத்தமபாளையம் கிராமத்தில், வட்டமலைக்கரை ஓடை அணை உள்ளது. 800 ஏக்கர் பரப்பளவையும், 650 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியையும் கொண்டது. பி.ஏ.பி., உபரி நீர் மற்றும் மழைநீர், இந்த அணைக்கு நிதி ஆதாரமாக உள்ளது. 6 ஆயிரம் ஏக்கர் பாசன நிலம் உள்ளது. கடந்த 2012ல், சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கு ஏலம் விடப்பட்டது. ஆனால், அணை பகுதியில் வைக்கப்பட்டிருந்த தேக்கு, சந்தனம், வேம்பு மரங்களும் வெட்டப்பட்டுள்ளன. அணையில் உள்ள மரங்களில் எண் குறியீடு செய்யவேண்டும். அணையின் பாதுகாப்புக்கு காவலர் நியமிக்கவேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். காற்றாலை மின்சாரத்தை அணைப்பகுதி வழியாக கொண்டு செல்வது, அனுமதி பெறாமல் மீன்பிடிப்பது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நொச்சிபாளையம் பகுதி மக்கள்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து, புதுப்பாளையம் பிரிவு வரை, மினிபஸ் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய பஸ்ஸ்டாண்டிலிருந்து நல்லுார், விஜயாபுரம் பிரிவு வழியாக, சிட்கோ வரை மட்டுமே மினி பஸ் இயக்குகின்றனர். எங்கள் ஊருக்கு வேறு எவ்விதமான பஸ் வசதியும் இல்லை. எனவே, மத்திய பஸ் ஸ்டாண்ட் முதல், புதுப்பாளையம் பிரிவு வரையிலான வழித்தடத்தில், மினிபஸ் இயக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொங்கலுார் வட்டார காங். செயற்குழு உறுப்பினர் முத்துகோபால் மற்றும் பொதுமக்கள்: பொங்கலுார் ஒன்றியம், நாச்சிபாளையம் ஊராட்சி எல்லையில், குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அப்புறப்படுத்தாமல், அவ்வப்போது தீவைத்து எரிக்கின்றனர். இதனால், சுகாதார கேடும், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. குப்பைகளை முறையாக அகற்றுவதற்கான திட்டங்களை, பொங்கலுார் ஒன்றியம் மேற்கொள்ள வேண்டும். நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 343 மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டன.