கொங்கு நாடு ரைபிள் கிளப் வீரர்கள் அபார சாதனை
திருப்பூர்; வெள்ளகோவில், லக்கமநாயக்கன்பட்டியில், கொங்குநாடு ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. திருப்பூரை சேர்ந்த கல்லுாரி மாணவி தனிஷ்கா செந்தில்குமார், 17; கோவையை சேர்ந்த மாணவன் யுகன், 14 உள்ளிட்டோர், ரைபிள் கிளப்பில் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த ஆக., மாதம், கஜகஸ்தானில் நடந்த, 16 வது ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி சார்பில், இவர்கள் பங்கேற்றனர். மொத்தம், 28 நாடுகளை சேர்ந்த, 800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற, தனிஷ்கா செந்தில்குமார், யுகன் இருவரும், தனி நபர் பிரிவுகளில்தலா, மூன்று தங்கப்பதக்கங்களையும், கலப்பு பிரிவில் ஒரு தங்க பதக்கத்தையும் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். கொங்குநாடு ரைபிள் கிளப் சார்பில், சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில், போலீஸ் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் தலைமை வகித்தார். காங்கயம் ஏ.எஸ்.பி., அர்பிதா ராஜ் முன்னிலை வகித்தார். சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.