உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு நன்றி! கலெக்டரிடம் சமூக ஆர்வலர்கள் வஞ்சப்புகழ்ச்சி

நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு நன்றி! கலெக்டரிடம் சமூக ஆர்வலர்கள் வஞ்சப்புகழ்ச்சி

பல்லடம் : புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து, பல்லடம் பகுதி சமூக அலுவலர் கூட்டமைப்பினர், கலெக்டரிடம் மனு அளித்தனர்.கலெக்டர் பங்கேற்கும், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' ஆய்வு பணி, பல்லடம் பகுதியில் நேற்று நடந்தது. அதில், கலெக்டரிடம் மனு அளித்த சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் விபத்துக்களை கருத்தில் கொண்டு புறவழிச்சாலை அமைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் என்ன நிலையில் உள்ளது என்பது தெரியவில்லை.நகராட்சி நிர்வாக ஊழல்கள், விவசாயிகளின் பிரச்னைகள், மண் கடத்தல் புகார், குடிநீர் பிரச்னை, அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, பல்வேறு புகார் மனுக்கள் சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.ஆனால், துறை ரீதியான அதிகாரிகள் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. புகார் மனுக்களை பெற்றுக்கொண்டு மாதக்கணக்கில் கிடப்பில் போட்டு விடுகின்றனர். எனவே, புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத, துறை ரீதியான அரசு அதிகாரிகள், அலுவலர்களுக்கு, நன்றியினை தெரிவிக்கிறோம். இந்த சேவை மேலும் தொடர பாராட்டு.இவ்வாறு அவர்கள் கூறினர்.புகார் மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி