குமரன் ரோடு சுரங்கப் பாலம் பணி: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
திருப்பூர்: குமரன் ரோடு சுரங்கப் பாலம் பணிக்காக, போலீசார் அறிவித்துள்ள போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. திருப்பூர் எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் பகுதியில் சுரங்க பாலம் பணி நடக்கிறது. இதற்காக பார்க் ரோட்டையும், யுனிவர்சல் சந்திப்பு ரோட்டையும் இணைக்கும் வகையில் நொய்யல் கரையை ஒட்டி, குமரன் ரோட்டின் குறுக்கில் சுரங்கப் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிக்காக, இந்த ரோட்டில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு, மாற்று பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் இந்த போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளது. இரு நாட்கள் சோதனை அடிப்படையில் இதை பின்பற்றவும் அதன் பின் தேவை ஏற்படும் மாற்றம் செய்து அதைப் பின்பற்றவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். குமரன் ரோடு வழியாக மாநகராட்சி சந்திப்பு மற்றும் மத்திய பஸ் ஸ்டாண்ட் செல்லும் கனரக வாகனங்கள் பார்க் ரோடு சந்திப்பிலிருந்து சாய்பாபா கோவில், யுனிவர்சல் சந்திப்பு, வளம் பாலம் வழியாக முத்துசாமி ரோடு முனிசிபல் ஆபீஸ் வீதியை அடையலாம். இலகு ரக மற்றும் இரு சக்கர வாகனங்கள் பார்க் ரோட்டில் சென்று, நேரு வீதி, நடாராஜா தியேட்டர் பாலம் அருகே புதிய ரோட்டில் சென்றுமுனிசிபல் ஆபீஸ் வீதி, மாநகராட்சி சந்திப்பை அடையலாம். மாநகராட்சி சந்திப்பு முதல் பார்க் ரோடு சந்திப்பு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. போலீசார் ஆயத்தம் இந்த போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், வாகனங்கள் செல்லும் பாதை குறித்த அறிவிப்பு பலகைகள்; எச்சரிக்கை மற்றும் வழிகாட்டி பலகைகளை போக்குவரத்து போலீசார் நேற்று தயார் செய்தனர். ஒரு சில இடங்களில் அவை நேற்று மாலையே அமைக்கப்பட்டது. இரவுக்குள் உரிய அறிவிப்பு பலகைகளை பொருத்தி இன்று காலை முதல் போக்குவரத்து மாற்றம் குறித்து கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். --- திருப்பூர், குமரன் ரோட்டில், சுரங்கப் பாலம் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூறலாம்
போக்குவரத்து மாற்றத்தில் ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்குமாறு மாநகர போலீசார் தொடர்பு எண்ணை (94981 81078) வெளியிட்டுள்ளனர். பல்வேறு யோசனைகளை இதில் பொதுமக்கள் மற்றும் அமைப்பினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் நடைபெறும் சோதனை அடிப்படையிலான போக்குவரத்து மாற்றத்தில் இவற்றை தேவைப்பட்டால் பயன்படுத்தும் வகையில் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.