உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி கொண்ட பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம்

பள்ளி கொண்ட பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம்

உடுமலை; கொழுமம் குப்பம்பாளையத்திலுள்ள பள்ளி கொண்ட பெருமாள் கோவில் மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. மடத்துக்குளம், கொழுமம் குப்பம்பாளையத்தில், நுாற்றாண்டுகள் பழமையான, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பள்ளி கொண்ட பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், செல்வகணபதி, சூளைக்கருப்பண்ணசாமி, பையம்மன், கன்னிமார், வீரமாத்தி அம்மன், முத்தம்மாள், நாக கன்னியர், கருடாழ்வார் ஆகிய பரிவார தெய்வங்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். பிரசித்தி பெற்ற இக்கோவிலில், பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, மங்கள இசையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், மகா சுதர்ஸன ஹோமம், கும்ப அலங்காரம், வேதபாராயணம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. நேற்று காலை, திருப்பள்ளி எழுச்சி, திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், காலை, 8:00 மணிக்கு, கலச புறப்பாடு நிகழ்ச்சி மற்றும் விமான கோபுர கலசங்கள் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு, மகா சம்ப்ரோஷனம் எனும் மகா கும்பாபிேஷகம் நடந்தது. இதில், தெலுங்கு மன்னவார் குல பங்காளிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை