உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மண் மாசு குறைப்போம்; மகசூல் பெருக்குவோம்

 மண் மாசு குறைப்போம்; மகசூல் பெருக்குவோம்

''மண் வளம் உயர்ந்தால் மகசூல் பெருகும்'' என்கின்றனர் வேளாண் துறையினர். சுந்தரவடிவேலு, இணை இயக்குனர்,திருப்பூர் மாவட்ட வேளாண் துறை: திருப்பூர் மாவட்டத்தில் மண் வளம் குறைந்து வருகிறது. பயிருக்கு தேவையான நைட்ரஜன் மற்றும் நுண்ணுாட்டச்சத்து குறைந்தளவிலும், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சத்து, நடுத்தர நிலையிலும் உள்ளது. மண் தன்மை, சத்துகளின் அளவை மண் பரிசோதனை வாயிலாக அறியலாம். திருப்பூரில் மண் பரிசோதனை நிலையம், பல்லடத்தில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் செயல்படுகிறது.இங்கு விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தின் மண் மற்றும் நீரை பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனை அறிக்கை அடிப்படையில், பயிர் மேலாண்மை யுக்திகள் மற்றும் உர பரிந்துரை தொடர்பான ஆலோசனை வழங்கப்படும். வேளாண் துறை சார்பில் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுாட்ட உரங்கள் மானியத்திலும் வழங்கப்படுகிறது. மண் வளத்தை பாதுகாத்து மகசூல் பெருக்க விவசாயிகள் முன்வர வேண்டும்.--- மண் என்பது புழுதி அல்லடாக்டர் ரேணுகா தேவி,மண்ணியல் விஞ்ஞானி,வேளாண் அறிவியல் நிலையம், பொங்கலுார்: மண் வளம் என்பது விவசாயம் சார்ந்தது மட்டுமல்ல; தெரு, பாதை, பூங்கா, தோட்டம் மற்றும் கட்டடங்களுக்கு இடையில் உள்ள மண் வளத்தையும் சார்ந்தது. மண்ணை இறுக செய்து, சமப்படுத்திய பிறகு தான் நகரங்களில் வீடு, கட்டடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால், மண்ணுக்குள் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் மடிகின்றன.கட்டுமானங்களுக்கு இடையில் உள்ள நிலப்பரப்பு, பூங்கா, நடைபாதை உள்ளிட்டவற்றில் கான்கிரீட் கட்டுமானம் எழுப்பாமல், மழைநீர் நிலத்தடிக்குள் செல்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அப்போது மண்ணில் நுண்ணுயிர் உருவாகி, மண் வளம் பாதுகாக்கப்படும். சுத்தமான காற்று, நீர் கிடைக்கும். நகரில் பசுமை பரப்புகளை அதிகப்படுத்தும் வகையில், பூங்கா, தோட்டங்கள் மற்றும் மாடி தோட்டங்கள் ஏற்படுத்த வேண்டும். நகர்ப்புறங்களிலும், பண்ணைகள் உருவாக்கப்பட வேண்டும். வீடுகளில் இருந்து வெளியேறும் காய்கறி கழிவு உள்ளிட்ட மட்கும் கழிவுகளை உரமாக மாற்றி, மண்ணில் இடுவதால் மண் வளம் மேம்படும். தொழிற்சாலை கழிவு, கழிவுநீர் ஆகியவை மண்ணை மாசுபடுத்தாத வகையில் சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ