திருப்பூர் : 'திருப்பூரில், நாளை, லேசான துாறல் மழைக்கு வாய்ப்புண்டு' என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இந்திய வானிலை துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், வேளாண்மை காலநிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில், திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர காலநிலை அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், வரும், 24ம் தேதி வரை, வானம் தெளிவாக இருக்கும். 22ம் தேதி (நாளை) லேசான துாறல் மழை இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை, 35 முதல், 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம், 22 முதல், 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 85 சதவீதம்; மாலை நேர காற்றின் ஈரப்பதம், 47 சதவீதமாக இருக்கும். மணிக்கு, 8 முதல், 14 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும்.இவ்வாறு, வானிலை நிலவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோடை மாதத்தின் துவக்கமே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், கோடை மழை பெய்தால் மட்டுமே, வெயிலின் தாக்கம் குறையும்.அதனை காட்டிலும் குடிநீருக்கு பல இடங்களில் பற்றாக்குறை ஏற்பட துவங்கியுள்ள நிலையில், திருப்பூர், திருமுருகன் பூண்டி, அவிநாசி பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக உள்ள மேட்டுப்பாளையம் பவானி அணை, வற்றியுள்ள நிலையில், குடிநீர் வினியோகத்திலும் சிக்கல் ஏற்படும்.