உடுமலை:நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணியின் போது, உடுமலை நகராட்சி குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உடுமலை நகராட்சிக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, இரண்டு குடிநீர் திட்டங்களின் கீழ், நாள் ஒன்றுக்கு, 9 எம்.எல்.டி., குடிநீர் கொண்டு வரப்பட்டு, நகர மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், தளி ரோட்டில், வாளவாடி பிரிவு பகுதியில், நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது.நகராட்சியில் உரிய முன் அறிவிப்பு கொடுக்கப்படாமலும், நகராட்சி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறாமலும், பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதில், திருமூர்த்தி அணையிலிருந்து சுத்திகரிப்பு செய்து, நகருக்கு குடிநீர் கொண்டு வரப்படும் பிரதான குழாய் உடைக்கப்பட்டது. பல லட்சம் லிட்டர் குடிநீர் ரோட்டில் ஓடி வீணாகியது.இதனையடுத்து, தற்காலிக கால்வாய் வெட்டி குடிநீர் திருப்பி விடப்பட்டது. இதனால், நகரில் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:குடிநீர் திட்ட பிரதான குழாய் அமைந்துள்ள பகுதிகளில், பணி மேற்கொள்ளும் போது, உரிய முறையில், நகராட்சிக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும்.நகராட்சி அதிகாரிகள் குழாய் உள்ள பகுதிகளை அடையாளம் காட்டுவதோடு, பணியின் போது குழாய் உடையாமல் இருக்க உரிய முன் ஏற்பாடுகள் செய்யப்படும்.நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணி, ஒப்பந்தம் எடுத்த நபர், உரிய முறையில் தெரிவிக்காமல், குழாயை உடைத்துள்ளார்.உடனடியாக சுத்திகரிப்பு மையத்தில், நீர் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டு, பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். இதனால், நகரில், 4 நாட்கள் வரை குடிநீர் வினியோகம் பாதிக்கும்.இவ்வாறு, தெரிவித்தனர்.