மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; இன்று கொடியேற்றம்
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், திருக்கம்பத்திற்கு தீர்த்தம் ஊற்றி பெண்கள் வழிபட்டு வருகின்றனர். இன்று திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சியும், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ஆண்டு தேர்த்திருவிழா புகழ் பெற்றது. இத்திருவிழாவுக்கு உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.தங்களது வேண்டுதல் நிறைவேற, நேர்த்திக்கடன்களை மேற்கொள்வர். நடப்பு ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த, 1ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.திருவிழாவில், கடந்த, 8ம் தேதி, இரவு திருக்கம்பம் கோவிலில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தினமும் நுாற்றுக்கணக்கான பெண்கள் தீர்த்தம் எடுத்து திருக்கம்பத்திற்கு ஊற்றியும், வேப்பிலை, எலுமிச்சை வைத்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.இன்று மதியம், 12:00 மணிக்கு, கோவிலில் திருவிழா கொடியேற்றம், நடக்கிறது. தொடர்ந்து, மதியம், 2:00 மணிக்கு, பக்தர்கள் நேர்த்திக்கடனாக பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி துவங்குகிறது. வரும், 15ம் தேதி இரவு, 10:00 மணிக்கு பூவோடு நிறைவு நிகழ்ச்சியும் நடக்கிறது.16ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு, பிற்பகல், 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம், வரும், 17ம் தேதி, மதியம், 4:15 மணிக்கு நடக்கிறது.18ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, இரவு, 8:00 மணிக்கு, அம்மன் பரிவேட்டை, இரவு, 10:00 மணிக்கு, குட்டைத்திடலில் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது.19ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, கொடியிறக்கம், 11:00 மணிக்கு, மகா அபிேஷகம், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, மாலை, 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது.திருவிழாவை முன்னிட்டு, 11ம் தேதி முதல், 18ம் தேதி வரை, தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில், தினமும் ஆன்மீக பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.