உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மனதை படிக்கும் உள்முக சிந்தனையாளர்கள்

 மனதை படிக்கும் உள்முக சிந்தனையாளர்கள்

ம னிதர்கள் தங்கள் ஆளுமை தன்மையை பொறுத்து இரு வகைப் படுவர். எப்போதும் கலகலவென இருந்து, அனைவரிடமும் எளிதில் பழகுபவர் 'எக்ஸ்ட்ரோவெர்ட்'. தனிமையை மட்டும் விரும்பி கூட்டத்துடன் கலக்காமல் தனித்து இருப்பவர் 'இன்ட்ரோவெர்ட்'. அவர்கள் உள்முக சிந்தனையாளர்கள். அவ்வாறான மனிதர்கள் குறித்து, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மனநல மருத்துவர் செந்தில்குமார் கூறியதாவது: 'இன்ட்ரோவெர்ட்' (INTROVERT) என்பவர்கள், தனிமை விரும்பிகள். ஒரு திருமணம், விழா போன்ற கூட்டத்தில் யாருடனும் எளிதில் சேராமல், அமைதியாக எல்லோரையும் கவனிப்பர். யாருடனும் அதிகம் பேச மாட்டார்கள். அவரது வேலையில் கவனமாக இருப்பர். யாராவது பேசினால் கூட, நன்கு சிந்தித்துதான் பேசுவர். நான்கு வார்த்தை பேசுமிடத்தில் ஒரு வார்த்தை பேசுவார்கள், அமைதியாக இருப்பர். இவர்கள் தன்னைத்தானே உணர்ந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள். எந்தவொரு நிகழ்ச்சியும் தன் உணர்வுகளில், எண்ணங்களில் என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்து சுய பரிசோதனை செய்வதில் கைதேர்ந்தவர்கள். தன்னைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருப்பதால் மற்றவர்களையும் எளிதில் புரிந்துகொள்வர். தனிமை விரும்புவதால் ஒன்று, இரண்டுக்கும் மேல் அதிகளவு நண்பர்கள் இருக்க மாட்டர். எல்லா இடத்திலும், பேசுவதை விட செயலில் கவனமாக இருப்பார்கள். எழுதுவதில் கைதேர்ந்தவராக இருப்பார்கள். மற்றவர்கள் சொல்வதை கூர்ந்து கவனிக்கும் திறன் இருப்பதால் அவர்களின் பிரச்னைகளை எளிதில் புரிந்துகொள்வர். அதற்கு தீர்வும் கொடுக்கக்கூடிய திறமை உள்ளவர்கள். கூர்மையான கண்ணோட்டம் பிறரிடம் எளிதில் பழகாததால் இவர்களுக்கு கூச்ச சுபாவம் இருப்பதாக பிறர் நினைக்கலாம். ஆனால் அது தவறு, இவர்கள் தெளிவான ஆட்கள். மனதை புரிந்துகொள்ளும், எதிர்காலத்தை தெளிவாக கணிக்கும், கூர்மையான கண்ணோட்டம் கொண்டவர்கள். இவர்களுடன் பழகுவது கடினம். பிறர் பார்வையில் கூச்ச சுபாவம் கொண்டவராக தெரிந்தாலும், அழுத்தமான, தெளிவான, ஆட்கள். இவர்களின் வேலையில் இவர்கள் சரியாக இருப்பர். இவ்வாறு அவர் கூறினார். - இன்று (ஜன. 2ம் தேதி) உலக உள்முக சிந்தனையாளர் தினம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி