மும்மொழி மட்டுமல்ல 30 மொழியும் கற்கலாம் அமைச்சர் சாமிநாதன் பேட்டி
பல்லடம்; ''மும்மொழி மட்டுமல்ல, 30 மொழிகளையும் கற்கலாம்,'' என, பல்லடம் அருகே, பல்வேறு அரசு திட்டப்பணிகளை துவக்கி வைத்து, அமைச்சர் சாமிநாதன் பேட்டி அளித்தார். திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மொத்தம், 4.25 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்த பின், நிருபர்களிடம் கூறுகையில், ''இரு மொழிக் கொள்கையில் மாநில அரசு தெளிவாக உள்ளது. மும்மொழி மட்டுமல்ல, 30 மொழிகளை விரும்பினாலும், அவற்றைப் படிப்பதில் எந்த விதமாக தடையும் இல்லை. மொழியை திணிப்பதை தான் தி.மு.க., அரசு எதிர்க்கிறது,'' என்றார். சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிசாமி என்பவரை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில், கட்சி ரீதியாக நடவடிக்கை இருக்குமா என்று கேட்டதற்கு, ''எந்த ஒரு வழக்கிலும் குற்றம் உடனடியாக உறுதி செய்யப்படுவதில்லை. விசாரணை அடிப்படையில் வழக்குப்பதியப்பட்டு, கோர்ட்டில் வழக்கு உறுதி செய்யப் படும்போது, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று அமைச்சர் கூறினார்.