அரிசி மாவுடன் சோளமும் கலந்தால் தோசை சுவைக்கும்; சத்தும் கிடைக்கும்
கொரோனா தொற்றுப்பரவலுக்கு பின், மக்களின் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. உடலை, நோய் எதிர்பாற்றலுடன் வைத்துக் கொள்வதே, நோயின்றி வாழ்வதற்கான ஒரே வழி என்பதை மக்கள் உணர துவங்கியதன் விளைவு, சிறு தானிய உணவுகளின் மீது மக்களின் நாட்டம் அதிகரித்திருக்கிறது.அதற்கேற்ப, மத்திய, மாநில அரசுகளும் சிறு தானிய உணவு உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், கிட்டத்தட்ட, 92 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுநாள் வரை, கால்நடை தீவனத்துக்கு மட்டுமே உற்பத்தி செய்யப்படும் சோளத்தில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வந்தது. தட்டுடன், தானியமும் தரும் 'கோ- 32' ரக சோளத்தை வேளாண்துறை, ஊக்குவிப்பதன் வாயிலாக ஏராளமான விவசாயிகள் சோளம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உணவிலும் அவற்றை பயன்படுத்த துவங்கியிருக்கின்றனர்.இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் போது, ஒரு படி அரிசிக்கு, அரைபடி சோளம் கலந்து, தயாரிப்பதன் வாயிலாக சுவையும், சிறு தானியத்தின் சத்தும் கிடைக்கிறது என, விவசாயிகளே கூறுகின்றனர். சோளம் மட்டுமின்றி, சிறு தானிய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.