தேசிய திறனாய்வு தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்
அவிநாசி; தேசிய திறனாய்வு தேர்வில், அப்பியாபாளையம் பள்ளியை சேர்ந்த ஐந்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.தமிழகம் முழுவதும் கடந்த பிப்., 22ல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவில், தமிழகத்தில் இருந்து, 695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தில், 63 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். அதில், மாவட்ட அளவில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பள்ளியாக அப்பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விளங்குகிறது. இப்பள்ளி மாணவர்கள் மகா ஹரிணி, பிரதிமா, தன்வி, லித்திஷ், தம்பியண்ணன் ஆகிய ஐந்து பேர் தேர்ச்சி பெற்றனர். தேசியத் திறனாய்வு தேர்வில், 8 ஆண்டாக தொடர்ந்து மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.