புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: கற்போரை சேர்க்க அறிவுறுத்தல்
உடுமலை; புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், கூடுதல் கற்போரை சேர்ப்பதற்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.15 வயதுக்கு மேற்பட்ட, குறிப்பாக கிராமப்பகுதிகளில் இருக்கும் கல்லாதவர்களுக்கு அடிப்படை கற்றல் அறிவை வளர்ப்பதற்கான திட்டமாக, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு அரசு பள்ளிகளைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, கல்லாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கற்றல் வழங்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கென கற்போர் மையமும் துவக்கப்பட்டு, அதில் பயிற்சி அளிப்பதற்கு கல்வித்துறை அறிவித்தது. இவ்வாறு கண்டறியப்படுவோருக்கு, தன்னார்வலர்கள் வாயிலாக கற்பிக்கப்படுகிறது.கல்வியாண்டின் இறுதியில், பயிற்சி மையத்தில் உள்ள கற்போருக்கு தேர்வுகளும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டிற்கான இலக்கின் படி கற்போர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், நடப்பாண்டில் கூடுதலாக அனைத்து மாவட்டங்களையும், நுாறு சதவீதம் கற்றல் அறிவு உள்ள மாவட்டமாக மாற்றும் வகையில், சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், தற்போது கற்போர் பட்டியலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விடவும் கூடுதலாக கற்போரை சேர்ப்பதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, பள்ளியின் சுற்றுப்பகுதியில் உள்ள கற்போர் குறித்து, மீண்டும் கணக்கெடுப்பு நடத்துவதற்கும் ஆசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.