மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு புதிய அலுவலக கட்டடம்
பல்லடம்,; திருப்பூரில் இயங்கி வந்த மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகம், நிர்வாக சிக்கல்களை தவிர்க்கும் வகையில், கடந்த, 2013ம் ஆண்டு, திருப்பூர் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பல்லடம், உடுமலை, தாராபுரம் பகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகம், பல்லடம் -- பொள்ளாச்சி செல்லும் பழைய பைபாஸ் ரோட்டில் உள்ளது.திருப்பூர் தெற்கு அலுவலகம் பிரிக்கப்பட்டது முதல், பல்லடத்தில் உள்ள வாடகை கட்டடத்தில் தான் இயங்கி வருகிறது. இதற்கு, புதிதாக கட்டடம் கட்ட திட்டமிடப்பட்ட நிலையில், பல்லடம் அடுத்த பெரும்பாளி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஓராண்டுக்கு முன் கட்டுமான பணிகள் துவங்கின.கட்டுமான பணிகள் நிறைவடைய உள்ளதை தொடர்ந்து, கட்டடம் திறப்பு விழா காண தயாராக உள்ளது. விரைவில், திறப்பு விழா செய்யப்பட உள்ளது.