திருப்பூர்:தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம், புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்க திருப்பூர் பின்னலாடைத்துறையினர் ஆயத்தமாகியுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அதிகாரிகள் குழுவினர், 26ல் பின்னலாடைத்துறையினரைச் சந்தித்து கருத்துகளைப் பரிமாற உள்ளனர். உலகளாவிய ஜவுளிச்சந்தையில், வளர்ந்த நாடுகளின் எதிர்பார்ப்புகள் மாற்றமடைந்துள்ளன. அடுத்தகட்ட வளர்ச்சிக்கு, தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி அவசியம் என்பதை தொழில்துறையினர் உணரத் துவங்கியுள்ளனர். மத்திய அரசும், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு திட்டங்களை தயாரித்துள்ளது. கடந்த, 2019ல், தொழில்நுட்ப ஜவுளி என, 207 வகை ஜவுளிப்பொருட்கள் அறிவிக்கப்பட்டன. இதில், 12 வகை பொருட்கள், ஆயத்த ஆடை உற்பத்தி வகையை சேர்ந்தது. இவ்வகை உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம், இந்திய ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி பாதை நோக்கி நடைபயிலும் என்ற நம்பிக்கை, தொழில்துறையினருக்கு உள்ளது. மத்திய அரசும், தொழில்நுட்ப ஜவுளித்துறைக்கு பிரத்யேக கவுன்சிலை உருவாக்கியுள்ளது. தமிழக அரசும், தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் துவங்கப்படுமென, பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. செயற்கை நுாலிழையே ஆதாரம்
மத்திய அரசு திட்டத்துடன், தமிழக அரசின் திட்டமும், தொழில்நுட்ப ஜவுளி இயக்கமும் இணையும் போது, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும். தொழில்நுட்ப ஜவுளி என்பது, செயற்கை நுாலிழை ஆடையின் அடுத்தநிலை வளர்ச்சி. தற்போது, பல்வேறு சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ரூ.88 ஆயிரம் கோடி இலக்கு
மத்திய ஜவுளித்துறை அமைச்சரகம், 2030ம் ஆண்டுக்குள், 88,000 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்ட, சிறப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப ஜவுளித்துறையில் குவிந்துள்ள வாய்ப்புகளை எடுத்துரைக்கும் வகையில், தமிழக அரசின் கைத்தறி துணி நுால்துறை சார்பில், தொழில்நுட்ப ஜவுளி வாய்ப்புகள் குறித்து, ஜவுளித்துறையினர், ஏற்றுமதியாளருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான, கருத்தரங்குகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில்,' தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி வாயிலாக, திருப்பூருக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. பல்வேறு வகை தொழில் வாய்ப்புகள் இருப்பதால், இதுதொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு, திருப்பூர் பாப்பீஸ் ஓட்டலில், வரும் 26ம் தேதி நடக்கிறது. தமிழக கைத்தறி துணி நுால் துறை செயலர், இயக்குனர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று, தொழில்நுட்ப ஜவுளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்,' என்றனர்.
தேவை அறிந்தால் முத்திரை பதிக்கலாம்
திருப்பூரில் நடைபெறும் ஜவுளி கண்காட்சிகளில், தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான அரங்குகளும் இடம் பெறுகின்றன. கப்பல் படை, ராணுவ வீரர்கள், விமானப்படை, பெரிய இன்ஜினியரிங் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும், பாதுகாப்பு கவசம் போன்ற தொழில்நுட்ப ஆடைகளும், கண்காட்சியில் இடம்பெறுகின்றன. வழக்கமான, உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள் மட்டுமல்லாது, உலக சந்தையில் உருவாகும் தேவைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்ப தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியிலும், ஏற்றுமதியாளர்கள் கால்பதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, கொரோனாவுக்கு பிறகு அதிகரித்துள்ளது. சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகள், வளர்ந்த நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதியில் முன்னோடியாக உள்ளன; தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் சீனா முக்கிய இடத்தில் இருக்கிறது. அதைப் பின்பற்றி, இந்திய ஏற்றுமதியாளர்களும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் இறங்கியுள்ளனர். டாக்டர், செவிலியர் சீருடைகள், படைவீரர்களுக்கான சீருடை, விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆடைகள், பொறியியல் தொழில்நுட்ப பணியாளர் சீருடைகள், கப்பல் பணியாளர் சீருடை என, பல்வேறு வகை தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி வாய்ப்புகள் உள்ளன.