உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிப்ட்-டீ பிரீமியர் லீக்; விக்டஸ், ராம்ராஜ் அதிரடி

நிப்ட்-டீ பிரீமியர் லீக்; விக்டஸ், ராம்ராஜ் அதிரடி

திருப்பூர்; அப்துல் கலாம் சுழற்கோப்பைக்கான நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், திருப்பூர், முதலி பாளையம் நிப்ட்-டீ கல்லுாரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் துவங்கி நடைபெற்றுவருகிறது. நிப்ட்-டீ கல்லுாரியுடன், 'தினமலர்' நாளிதழ் மற்றும் டெக்னோ ஸ்போர்ட்ஸ் கைகோர்த்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 20 பின்னலாடை உற்பத்தி நிறுவன கிரிக்கெட் அணிகள் களத்தில் உள்ளன. 15 ஓவர்களுடன் லீக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இரண்டாவது நாளான நேற்று நடந்த முதல் போட்டியில், சாகி எக்ஸ்போர்ட்ஸ் - பிராச்சி எக்ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சாகி எக்ஸ்போர்ட்ஸ், 14 ஓவரில், பத்து விக்கெட்களையும் இழந்து, 76 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பிராச்சி அணி, 14 ஓவரில், 7 விக்கெட் இழந்து, 77 ரன்னுடன் வெற்றியை கைப்பற்றியது. இரண்டாவது போட்டியில், அமேஸிங் எக்ஸ்போர்ட்ஸ் - ராம்ராஜ் காட்டன் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராம்ராஜ் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய அமேஸிங் அணி, 15 ஓவரில், ஒன்பது விக்கெட் இழந்து, 48 ரன் எடுத்தது. ராம்ராஜ் பவுலர்கள் சச்சின் சரவணன், 4 விக்கெட்; அசோக், 3; புஷ்பராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்ததாக பேட்டிங் செய்த ராம்ராஜ் அணி, அதிரடியாக விளையாடியது. துவக்க ஆட்டக்காரர்களான அஜித்குமார், ருத்வின் இருவரும் சேர்ந்து, ஐந்தே ஓவரில், 49 ரன் எடுத்து, வெற்றியை தேடித்தந்தனர். மற்றொரு போட்டியில், யுனிசோர்ஸ் டிரென்ட் இந்தியாவும், விக்டஸ் டையிங் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த விக்டஸ் டையிங், துவக்கம் முதலே சிறப்பாக விளையாடி, 15 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு, 170 ரன் குவித்தது. அந்த அணியின் வீரர்கள் சசி வில்லியர்ஸ், ஈஸ்வரன் ஆகிய இருவரும், அரை சதத்தை கடந்தனர்; சசி 4 பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் விளாசினார். ஈஸ்வரன், 6 பவுண்டரியும்; ஒரு சிக்ஸரும் அடித்தார். அடுத்ததாக பேட்டிங் செய்த யுனிசோர்ஸ் அணி, 13.1 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 61 ரன்னில் ஆட்டமிழந்தது. நான்காவது போட்டியில், தினேஷ் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் - காஸ்மோ டெக்ஸ் மோதின. முதலில் பேட்டிங் செய்த காஸ்மோ, 15 ஓவரில், 6 விக்கெட் இழந்து 76 ரன் எடுத்தது; அடுத்ததாக களமிறங்கிய தினேஷ் டெக்ஸ்டைல்ஸ், 12 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு, 77 ரன் எடுத்துவெற்றிபெற்றது. தொடர்ந்து வரும் 17ம் தேதி (ஞாயிறு), மூன்றாவது நாள் போட்டிகள் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை