உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிப்ட்-டீ கிரிக்கெட் போட்டி; லீக் சுற்று போட்டிகள் நிறைவு

நிப்ட்-டீ கிரிக்கெட் போட்டி; லீக் சுற்று போட்டிகள் நிறைவு

திருப்பூர்;'நிப்ட்-டீ பிரீமியர் லீக்' கிரிக்கெட்டில், அதிக புள்ளிகள் பெற்று, எட்டு பின்னலாடை நிறுவன அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன; வரும் 12, 26 தேதிகளில், காலிறுதி போட்டிகள் நடைபெறுகின்றன. நிப்ட்-டீ கல்லுாரி மற்றும் 'தினமலர்' நாளிதழ், டெக்னோ ஸ்போர்ட்ஸ் இணைந்து, அப்துல் கலாம் சுழற்கோப்பைக்கான 'நிப்ட்-டீ பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின் 20 அணிகள் பங்கேற்றன. கடந்த ஆக. 9ம் தேதி முதல், 15 ஓவர் கொண்ட லீக் போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. முதல் லீக் போட்டியில், சி.ஆர்., கார்மென்ட்ஸ் (டைகர்) - எஸ்.டி., வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சி.ஆர். கார்மென்ட்ஸ் டைகர் அணி, ஒன்பது விக்கெட் இழப்பில் 86 ரன் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய எஸ்.டி. வாரியர்ஸ், 2 விக்கெட் இழப்பில், 69 ரன்னில் ஆட்டமிழந்தது. வெற்றி பெற்ற சி.ஆர்., கார் மென்ட்ஸ் அணியின் பவுலர் கமலக்கண்ணனுக்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இவர், ஒன்பது ஓவர் பந்து வீசி, 11 ரன் கொடுத்து, 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்த இரண்டு போட்டிகளிலும், தலா ஒரு அணியினர் பங்கேற்கவில்லை. இதனால், போட்டி களத்துக்கு வந்த சி.ஆர்., கார்மென்ட்ஸ் (ஈகிள்) மற்றும் ஸ்ரீ சிவஜோதி ஸ்பின்னிங் மில்ஸ் அணிகள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. நேற்றைய நான்காவது போட்டியில், தங்கம்மன் பேஷன்ஸ் - குவாலியன்ஸ் இன்டர்நேஷனல் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தங்கம்மன், 10 விக்கெட் இழப்பில், 62 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய குவாலியன்ஸ், மூன்று ஓவரில், 2 விக்கெட் இழந்து, 20 ரன் எடுத்தது. திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இதனால், கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது. 'ரன்ரேட்' அடிப்படையில், குவாலியன்ஸ் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது; அந்த அணி வீரர் ஸ்ரீராமுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. காலிறுதி போட்டி நேற்றுடன் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. மொத்தம், 40 லீக் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், அதிகபுள்ளிகள் பெற்று எட்டு அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 20 ஓவருடன், தினமும் இரண்டு வீதம் காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. வரும், 12ம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் - எஸ்.டி., வாரியர்ஸ் மற்றும் சி.ஆர்., கார்மென்ட்ஸ் டைகர் - குவாலியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. 26ம் தேதி நடைபெறும் போட்டியில், விக்டஸ் டையிங் - ராம்ராஜ் காட்டன் அணியும் மற்றும் சி.ஆர். ஈகிள்ஸ் - டெக்னோ ஸ்போர்ட் அணிகள் மோதுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை