உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரசாரமில்லை... கோஷமில்லை ஆனாலும், ஒரு தேர்தல் நடந்தது!

பிரசாரமில்லை... கோஷமில்லை ஆனாலும், ஒரு தேர்தல் நடந்தது!

ஆரவாரமின்றி திருப்பூரில் ஒரு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா...? இது, தேர்தல் தான். ஆனால், ஒரிஜினல் அல்ல.திருப்பூர், புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச் சாவடியில் இந்த தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, ஓட்டு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு ஆகியன நடந்தது.தேர்தல் நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தப்பட்ட தேர்தல் எனத்தெரிய வந்தது. தேர்தல் என்றால் என்ன. தேர்தல் அறிவிப்பு, வேட்பு மனுத்தாக்கல், சின்னம் ஒதுக்குதல், ஓட்டுப்பதிவு செய்தல், ஓட்டு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவித்தல் போன்ற ஒட்டு மொத்த தேர்தல் நடவடிக்கைகளும் பள்ளி மாணவியர்களுக்கு மாதிரி தேர்தல் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இப்பள்ளியில், 6 முதல் 12 ம் வகுப்பு வரை 1,127 பேர் படிக்கின்றனர். இங்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வை மாணவியருக்கு ஏற்படுத்தும் வகையில், பள்ளி வளர்ச்சி கட்சி மற்றும் பள்ளி சாதனைக் கட்சி ஆகிய இரு கட்சிகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் வகையில் சின்னம் பள்ளி வளர்ச்சி கட்சிக்கு புத்தகம் சின்னமும், சாதனை கட்சிக்கு பேனா சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த வாரம் வேட்பு மனுத்தாக்கல் நடத்தப்பட்டது.தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்கள் வகுப்பு வாரியாகச் சென்று பிரசாரம் செய்தனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஓட்டுப் பதிவு நடைபெற்றது. வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல், பூத் சிலிப் ஆகியன வழங்கப்பட்டது. இவற்றில் தேர்தல் அலுவலர்களாக மாணவியர்கள் பணியாற்றினர். ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டு, ஓட்டுச் சாவடி அலுவலர்கள் நியமித்து ஓட்டுப் பதிவு நடந்தது.வழக்கமான தேர்தல் போல், அடையாள மை வைத்து, வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர்.ஓட்டுப்பதிவு முடிந்து ஓட்டு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவித்து வெற்றி சான்றிதழ் வழங்குவது வரை தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் மாணவியர்களால் மேற்கொள்ளப்பட்டது.நிஜமான தேர்தலில், 18 வயது பூர்த்தியான பின்பே ஓட்டு போடும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதற்கு முன்னதாகவே நாங்கள் தேர்தலில் பங்கேற்றோம். இந்த தேர்தலையே மாணவியரான நாங்களே நடத்தியது எங்களுக்கு புதிய அனுபவத்தை அளித்தது என மாணவியர்கள் தெரிவித்தனர். தேர்தல் குறித்த விழிப்புணர்வை உரிய வகையில், மாதிரி தேர்தல் வாயிலாக, மாணவியருக்கு ஏற்படுத்திய ஆசிரியர்களின் பணி பாராட்டுக்குரியதாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி