மத்திய பஸ் ஸ்டாண்டில் நடைபாதை ஆக்கிரமிப்பு
திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை, சேலம், உடுமலை, பொள்ளாச்சி, ஈரோடு, கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் ஸ்டாண்டுக்கு வருகின்றனர். வளாகத்தில் உள்ள ஏராளமான கடைகள், தங்கள் கடை முன்பு பொருட்களை நடைபாதையில் வைத்து ஆக்கிரமித்துள்ளனர்.இதன் காரணமாக, பயணிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏதாவது பிரச்னைகள் எழும் போது, மாநகராட்சி அதிகாரிகள் வெறும் கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுப்பதுண்டு. சில நாட்களில் மீண்டும், பழைய நிலை தொடர ஆரம்பித்து விடுகிறது.பஸ்சிற்காக காத்திருக்க கூடிய மக்கள் கடைகள் முன்பு உள்ள நடைபாதையில் நின்றால், கடைக்காரர்கள் சத்தம் போடுவது தொடர்கிறது. இதுபோன்ற பல்வேறு சிரமங்களால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.''நடைபாதையில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் அகற்ற வேண்டும்'' என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.