| ADDED : நவ 15, 2025 01:10 AM
திருப்பூர்: திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து லேசான பனிப்பொழிவு காணப்பட்டது. பகல் நேரங்களில் சூரியனின் கடுமையான தாக்குதல் எங்கும் இல்லை. வானம் மேகமூட்டத்துடன் தொடர்ந்து இருந்தது. இருப்பினும் வெப்பமான நிலையே நீடித்தது. மாலை மற்றும் அதிகாலையில் மிதமான பனிப்பொழிவு மற்றும் இதமான குளிர் சீதோஷ்ண நிலை நிலவியது. பகல் நேரத்தில் சூரியன் தகிக்காத நிலையிலும் வெப்பம் இருந்ததால், கலவையான தட்ப வெப்ப நிலை காணப்பட்டது. இந்நிலையில், நகரை சுற்றிலும் பல இடங்களில் மழை பெய்யத் துவங்கியது. காலை 6:00 மணியளவில் துவங்கிய சற்று பெரிய துாறல் மழை 8:30 மணி வரையும் சில இடங்களில் நீடித்தது. இதனால் காலை நேரம் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் சற்று சிரமத்துக்கு ஆளாகினர். ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் பெய்த மழை காரணமாக சில பகுதிகளில் ரோடுகளில் மழை நீர் தேங்கியது. ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்த சில இடங்களில் பெரும் அவதி நிலவியது. சுரங்க பாலம் பணி காரணமாக குமரன் ரோட்டில் வாகனப் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. அவ்வகையில் தற்போது அதிகளவிலான வாகனங்கள் கடந்து செல்லும் யுனிவர்சல் சந்திப்பு ரோட்டில் வாகனங்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்தன. l மாநகராட்சி 39வது வார்டுக்கு உட்பட்ட மங்கலம் ரோடு, தனலட்சுமி நகர். நேற்று காலை பெய்த மழை காரணமாக இங்குள்ள வீதிகளில் மழை நீர் சென்று தேங்கி பெரும் அவதி நிலவியது. l திருப்பூர் நகரப் பகுதியில் அனைத்து பிரதான ரோடுகளில் நேற்று காலை பெய்த மழையால், பல இடங்களில் சிறிதளவு மழை நீர் தேங்கியது. சேறும் சகதியுமாக ரோடு காணப்பட்டது. இதனால், வாகனங்கள் அனைத்து பகுதியிலும் மெதுவாக ஊர்ந்தபடியே கடந்து சென்றன.