ஊராட்சி செயலர்கள் மாற்றம் பி.டி.ஓ. அதிரடி உத்தரவு
பல்லடம்: பல்லடத்தில், 6 ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து, பி.டி.ஓ., அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊராட்சித் தலைவர்கள் பதவிக்காலம் முடிவடைந்து, தற்போது, தனி அலுவலர் கட்டுப்பாட்டில் ஊராட்சிகள் உள்ளன. தனி அலுவலரின் வழிகாட்டுதலின்படி, ஊராட்சி செயலர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதர, அரசு ஊழியர்களைப் போன்று, 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊராட்சி செயலர்கள் பணியிட மாறுதல் செய்யப்படுவதில்லை. மாறாக, ஏதேனும் புகார்கள், குற்றச்சாட்டுகள் இருக்கும் பட்சத்தில், பி.டி.ஓ., மூலம் பணியிட மாறுதல் செய்யப்படுகின்றனர். பல்லடம் ஒன்றியத்தில், 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், பெரும்பாலான ஊராட்சிகளில் பணிபுரியும் செயலர்கள், பல ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் நீடிக்கின்றனர். தற்போது பல்லடம் ஒன்றியத்தில், 6 ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து பி.டி.ஓ., கனகராஜ் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் தான், கரைப்புதுார், ஆறுமுத்தாம்பாளையம், கணபதிபாளையம், வடுகபாளையம் புதுார் ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இச்சூழலில், நேற்று, இச்சிப்பட்டி, அனுப்பட்டி, வேலம்பாளையம், பணிக்கம்பட்டி, புளியம்பட்டி மற்றும் கோடங்கிபாளையம் ஆகிய, 6 ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி, நேரு- - வேலம்பாளையம், ராஜேந்திரன் - -இச்சிப்பட்டி, ரங்கநாதன்- - பணிக்கம்பட்டி, ரத்தினசாமி- - அனுப்பட்டி , கவிதா- - கோடங்கிபாளையம், கண்ணப்பன் - - புளியம்பட்டி மற்றும் கே. கிருஷ்ணாபுரம்' ஊராட்சிகளுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டனர். நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக, பி.டி.ஓ. குறிப்பிட்டுள்ளார்.