ஊராட்சி செயலர் திடீர் இடமாற்றம்
பல்லடம்: ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் முடிந்து, கடந்த ஜன., மாதம் முதல் தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் ஊராட்சிகள் இயங்கி வருகின்றன.பல்லடம் ஒன்றியத்தில், 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி செயலர்கள், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி, இதர அரசு அலுவலர்களைப் போன்று இல்லாமல், ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்ய இயலாது.இச்சூழலில், பல்லடம் ஒன்றியத்தில் உள்ள சில ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து பி.டி.ஓ., உத்தரவிட்டார்.அவ்வகையில், இச்சிப்பட்டி ஊராட்சி செயலர் ராஜேந்திரன், அனுப்பட்டிக்கும், அனுப்பட்டி செயலர் கலைவாணி, பூமலுார் ஊராட்சிக்கும், பூமலுார் ஊராட்சி செயலர் விஜயகுமார், செம்மிபாளையத்துக்கும், கரைப்புதுார் ஊராட்சி செயலர் காந்திராஜ், ஆறுமுத்தாம்பாளையம், செம்மிபாளையம் ஊராட்சி செயலர் சுரேஷ்குமார் கரைப்புதுார், வடுகபாளையம்புதுார் ஊராட்சி செயலர் கிருஷ்ணசாமி, இச்சிப்பட்டிக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.இது குறித்து, பி.டி.ஓ., கனகராஜ் கூறுகையில், ''பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள் மற்றும் மக்கள் பணிகள் தேக்கமடைந்து வந்ததன் காரணமாகவும், சில ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதன்படி, சில செயலர்களை மாற்றம் செய்யும்போது, இவர்கள் பணி மாறுதல் பெறும் இடத்தில் உள்ள செயலர்களையும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, நிர்வாக நலன் கருதி சில ஊராட்சி செயலர்கள் மாற்றப்பட்டனர்,'' என்றார்.