உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தொழில் நிறுவனங்களின் அணிவகுப்பு

 தொழில் நிறுவனங்களின் அணிவகுப்பு

திருப்பூர்: கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாசார நிறுவனம் சார்பில் முப்பெரும் விழா திருப்பூரில் நேற்று கண்காட்சி திறப்பு நிகழ்ச்சியுடன் துவங்கியது. கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாசார நிறுவனத்தின் நான்காம் ஆண்டு விழா; கொங்கு நாட்டு தொழில் நிறுவனங்களின் கண்காட்சி; கொங்கு வர்த்தக கூட்டமைப்பின் மூன்றாமாண்டு பொங்கல் விழா ஆகிய முப்பெரும் விழா திருப்பூரில் நேற்று துவங்கியது. தாராபுரம் ரோடு, ஸ்ரீ வேலாயுதசாமி திருமண மண்டபத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ள கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நடந்தது. வேளாண்மையிலும் தொழிலிலும் முதன்மை கண்காட்சி அரங்கை திறந்து வைத்து, சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகளை வழங்கி, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் பேசியதாவது: விவசாயம் செய்து இந்த உலகுக்கு உணவு வழங்கும் பணியை முதன்மையாக தொழிலாக இருந்து கொங்கு சமுதாயம் இன்று பல்வேறு தொழிற்துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது. மனித இனம் நாகரீகம் பெற்று முதலில் துவங்கிய தொழிலே வேளாண்மை தான். அதனால் தான் 'கல்சர்' என்ற கலாசாரத்தில் 'அக்ரிகல்சர்' என விவசாய தொழிலை முதன்மையாக குறிப்பிட்டுள்ளனர். வேளாண்மையும் தொழிலும் மட்டுமின்றி கலாசாரத்திலும் நாம் முன்னோடிகளாக உள்ளோம். நமது உடை, பண்பாடு, வழிபாடு, கலை, இலக்கியம் என அனைத்திலும் கொங்கு மக்கள் இந்த உலகுக்கு முன்னோடியாக வழிகாட்டியாக உள்ளோம். விவசாயத்துக்கு மாற்றாக இங்கு தொழில்கள் வளரத் துவங்கி, இன்று உலக அளவில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கு காரணம் நம் மக்களின் கடுமையான உழைப்பு, எளிமையான வாழ்க்கை போன்றவை தான். இவ்வாறு அவர் பேசினார். 40% வருவாய் வழங்கும் கொங்கு மண்டலம் எம்.எல்.ஏ. ஈஸ்வரன் முன்னிலை வகித்து பேசியதாவது: கொங்கு மண்டலம் தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதி. இந்த பகுதி பெரும்பாலும் சுயமாகவே தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. அரசின் வருவாயில் 40 சதவீத வருவாயை நம் பகுதி தான் வழங்குகிறது. ஆனால், உரிய கட்டமைப்புகள் இங்கு ஏற்படுத்தவில்லை. அதற்கான முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். பல்லாயிரம் தொழில் நிறுவனங்கள், பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பையும் நாம் வழங்கிவருகிறோம். நம் மண் மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்துக்கு மாறி வருவதாக ஒரு காலகட்டத்தில் அச்சம் நிலவியது. ஆனால், இன்று மேற்கத்திய நாடுகள் நம் கொங்கு கலாசாரத்தை நோக்கி வருகிறது. இதை நாம் பல இடங்களில், பலவகையிலும் உணர்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். முன்னிலை வகித்த 'கிட்கோ' இயக்குனர் பாலசுப்ரமணியம், அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் நோக்கம் குறித்து பேசினார். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள தொழில் நிறுவனங்களின் அரங்குகளை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர். முன்னதாக மாநாட்டு குழு தலைவர் வசந்தகுமார் வரவேற்றார். மாநாட்டு குழு மற்றும் கொங்கு வர்த்தக குழு நிர்வாகிகள், பாலுசாமி, ரமேஷ்குமார், பாலசுப்ரமணியம்; 'கிட்கோ' மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறந்த இளம் தொழில் முனைவோர், சிறந்த பிராண்ட் மார்க்கெட்டிங் நிறுவனர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. பரத நாட்டியம் மற்றும் ஒயிலாட்ட நிகழ்ச்சிநடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி