உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி அருகில் உள்ள மதுக்கடையை அகற்றுங்க; பெற்றோர் கோரிக்கை

பள்ளி அருகில் உள்ள மதுக்கடையை அகற்றுங்க; பெற்றோர் கோரிக்கை

உடுமலை; உடுமலை ராஜேந்திரா ரோட்டில், அரசு பள்ளி அருகே உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. உடுமலை ராஜேந்திரா ரோட்டில், நகராட்சி நடுநிலைப்பள்ளி, கேந்திர வித்யா பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த ரோட்டில் பள்ளிக்கு அருகில் 'டாஸ்மாக்' மதுக்கடை உள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பரபரப்பான ரோட்டில், இவ்வாறு மதுக்கடை இருப்பதால் பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது. மாலை நேரங்களில் 'குடி'மகன்கள் பள்ளிக்கு அருகில் ரோட்டில் அரைகுறையான நிலையில் விழுந்து கிடப்பதும், நிலையில்லாமல் தள்ளாடிச்செல்வதும், குழந்தைகளை அழைத்துச்செல்ல வரும் பெற்றோருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பள்ளிக்கு அருகில் அண்ணா பூங்கா இருப்பது, 'குடி'மகன்களுக்கு கூடுதல் வசதியாக உள்ளது. பள்ளி நடக்கும் நேரத்தில் கூட பூங்கா அருகில் நின்று மது அருந்துகின்றனர். இத்தகைய செயல்கள் மாணவர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக மாறிவிடும் ஆபத்தான சூழல் தான் தற்போது உள்ளது. டாஸ்மாக் மதுக்கடை அருகில் இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், தவறான வழிகாட்டுதல் இல்லாமல் பள்ளியின் சூழலை மாற்றுவதற்கும் ராஜேந்திரா ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டுமென பெற்றோர் வலியுறுத்துகின்றனர். இது சம்பந்தமாக போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார் மனுக்கள் அனுப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !