உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்காக பூங்கா

 அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்காக பூங்கா

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அதிகமான பிரசவங்கள் நடக்கும் மருத்துவமனையாக, திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மகப்பேறு பிரிவில், நாள் ஒன்றுக்கு, 50 - 60 குழந்தைகள் பிறக்கின்றன; 24 மணி நேரமும் பிரசவ பிரிவு பிஸியாகவே உள்ளது. தாய், சேய் இருவரையும் காண குடும்பத்தினர், உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். குழந்தைகளுடன் வருவோர் விரும்பும் வகையில், மகப்பேறு பிரிவு அருகே, பூங்கா அமைக்கும் பணி, பொதுப் பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மகப்பேறு மருத்துவர்கள் கூறியதாவது: பிறந்தது முதல் ஐந்து வயது வரை குழந்தைகளின் வளர்ச்சி, செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம். இதற்காக, தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் செயல்படுகிறது. குழந்தைகள் வளர்ச்சியில் காணப்படும் தாமதம் மற்றும் மாற்றுத்திறன்கள் குறித்து ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதற்கு தேவையான சிகிச்சையை உடனே துவங்குவது அவசியம். வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் பார்வை, ஒலி கேட்பது, தொடு உணர்வு மாறுபடும். இதை விளையாட்டு வடிவில் துாண்ட இப்பூங்கா உதவும்; அதற்கேற்ற வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு பிரத்யேக நடைபாதை பூங்காவில் நிறுவப்பட்டு வருகிறது. அனைத்து குழந்தைகளும் பூங்காவை பயன்படுத்திக் கொள்ள முடியும். பூங்கா செயல்பாடு குறித்து, பூங்கா திறக்கும் நாளில் செய்முறை விளக்கம் அளிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !